தமிழ்நாடு

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளும், கட்சித் தலைவர்களும்!

Muthumari

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இரண்டே அடிகளில் எடுத்துக்கூறி 1330 குறள்கள் வாயிலாக உலக மக்களுக்கு நன்னெறிகளை தந்தவர் திருவள்ளுவர். ‘உலகப் பொதுமறை’ என்று உலக மக்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்த அசாத்திய சாதனையை அவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று மகாகவி பாரதியும், 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' என்று கவிஞர் பாரதிதாசனும் அவரைப் போற்றிப் பாடியுள்ளனர். உலக மக்களின் வாழ்வியலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மக்கள் பலருக்கும் வழிகாட்டுகிறது. 

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் சென்னை மயிலாப்பூரில் வசித்ததாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கும் கூட முறையான ஆதாரங்கள் இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தமிழில் எழுதியதே தமிழர்களுக்கே உரிய பெருமையாக பார்க்கப்படுகிறது. தமிழும், தமிழர்களும் உலக அளவில் இன்றும் மார்தட்டிக்கொள்ள இவரைப் போன்றோர்களும் காரணம். 

அப்படிப்பட்ட ஒரு பொதுமறையைக் கற்று, வாழ்வில் கடைப்பிடிப்பது குறித்து யோசிக்காமல் அதனை இயற்றிய திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்பதுதான் தமிழகத்தில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக இப்போது மாறியுள்ளது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு அளித்த திருவள்ளுவர் சமணரா? சைவரா? வைணவரா? என்பதைப் பற்றித்தான் இந்தியா முழுவதும் பேச்சு. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறிய அவர் எந்த தெய்வத்தை தொழுதிருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன. 

கடந்த நவம்பர் 1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ அன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழின் சிறப்பைக் கூறி வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள திருவள்ளுவருக்குக் காவி வண்ணத்தில் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இது அப்போது பெரிதாகக் கவனம் பெறவில்லை.

அதைத்தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி, 'கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்...' என்ற குறளை வைத்து திருவள்ளுவர் படத்துடன் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. அந்தப் படத்திலும் திருவள்ளுவருக்கு காவி உடை, நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் இருந்தது.

மேலும், 'கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.க.வும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்' என்று பாஜக தமிழ்நாடு பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இதன்பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தலைதூக்கவே, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 'வள்ளுவர் சமணத் துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை' என்று பதிவிட்டார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்தது. 

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை மாட்டுச் சாணத்தால் மர்ம நபர்கள் அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பல கட்சித் தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே கருத்து மோதல்கள், விவாதங்கள் என நடைபெற்று வருகின்றன. 

திருவள்ளுவர் தான் எழுதிய குறள்களில் எந்த இடத்திலும் கடவுளின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. அனைவருக்கும் பொதுவான ஒரு நூலாகவே திருக்குறள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் ஓவியர் வேணுகோபால் ஷர்மா. திருவள்ளுவரைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தே அவருக்கு இந்த உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு தமிழக அரசு திருவள்ளுவரின் உருவத்திற்கு ஒப்புதல் அளித்து, 1967-ம் ஆண்டு திருவள்ளுவரின் படம் அறிமுகப்படுத்தப்பட்டு அது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. அதில் திருவள்ளுவர் வெள்ளை உடையே அணிந்திருப்பார். 

அதுமுதல் வெள்ளை உடையில் இருப்பது போன்ற திருவள்ளுவர் புகைப்படத்தையே பயன்படுத்தி வருகிறோம். தற்போது திருவள்ளுவருக்கு காவி உடை தந்துள்ள பாஜக, கடந்த ஜூலை மாதம் தனது ட்விட்டர் பதிவில் வெள்ளை உடையுடன் கூடிய திருவள்ளுவர் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறது. அதன்பிறகு, சமீபத்திய ஓரிரு மாதங்களில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்  என தெரியவில்லை. 

பல நூறு ஆண்டுகளாக பள்ளிக் காலத்தில் இருந்து படித்துவரும் நாம், திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று யோசித்திருப்போமா? ஆனால், இன்று அவரை வைத்து பல கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. சாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் வாழும் நாடு இந்தியா என பெருமை பாடி வரும் நம்நாட்டில்தான் இன்று திருவள்ளூவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம்..

இன்று தஞ்சையில் திருவள்ளுவரின் சிலையை அவமதித்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், இன்று உலகமே கொண்டாடும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை தமிழர்களே அவமதித்ததற்கு அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். மேலும், கட்சிகள் அவர்களது அரசியல் லாபத்திற்காக இதுபோன்று கருத்துகளை பதிவிட்டு மக்களிடையே மதவெறியை தூண்டுவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது. 

கி.பி. 2-ம் நூற்றாண்டில் சமயங்கள் இருந்தனவா? அதில் திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உலகிற்கு எடுத்துரைக்கட்டும். அரசியல் என்றால் என்ன? ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும்? என எடுத்துரைத்த திருவள்ளுவரை வைத்தே இன்று கட்சிகள் அரசியல் செய்வதை என்னவென்று சொல்வது?

எனவே, இதுபோன்ற அரசியல் கட்சிகளின் மதவெறி தூண்டுதலுக்கு விலை போகாமல், வள்ளுவன் இவ்வுலகிற்கு அளித்த திருக்குறளைக் கற்றுக்கொண்டு அதனை வாழ்வில் பின்பற்ற முயற்சிப்போமாக..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓஹோ.. எந்தன் பேபி!

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

SCROLL FOR NEXT