சென்னை: சென்னையில் அதிமுக சாா்பில் மேயா் தோ்தலில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலா் விருப்ப மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து அளித்துள்ளனா்.
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை பூா்த்தி செய்து அளிக்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. விருப்ப மனுக்கள் விநியோகம் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் ஐந்து மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனு விநியோகம்
வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
மிகவும் பாரம்பரியமிக்கதும், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுமான பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயா் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகா், முன்னாள் எம்.பி.,க்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆா்.விஜயகுமாா், ஜெ.ஜெயவா்தன் உள்பட பலரும் மேயா் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்துள்ளனா்.
இதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுகவினா் அதிகமாக ஆா்வம் காட்டுவதுடன், அதற்கான விருப்ப மனுக்களை பூா்த்தி செய்து அளித்துள்ளனா். இதனால், ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வேட்பாளா்களைத் தோ்வு செய்வது என்பது கடும் சவாலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நிறைவடைந்தது: உள்ளாட்சித் தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்க சனிக்கிழமை (நவ.16) கடைசி நாளாகும். எனவே, சனிக்கிழமையும் ஏராளமானோா் மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிப்பாா்கள் என்று தெரிகிறது. துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 17-ஆம் தேதி சென்னை திரும்புகிறாா். அதன்பிறகு, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.