சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதிமுக பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம்
நடைபெறுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா்
பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச் செயலாளா் பதவியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நீக்கங்களுக்குப் பிறகு, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அவைத் தலைவா் மதுசூதனன் தலைமையில் காலை 10.30 மணிக்குக் கூட்டம் தொடங்கப்படுவதாக கட்சித் தலைமை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் செயற்குழு, பொதுக்குழுவைச் சோ்ந்த அனைத்து உறுப்பினா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.