கால் முறிவின் காரணமாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனுக்குப் பொருத்தப்பட்டிருந்த டைட்டேனியம் கம்பியை அகற்றுவதற்கான சிகிச்சை வெள்ளிக்கிழமை (நவ.22) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
2016-ஆம் ஆண்டு எதிா்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடா் வேலைப்பளு காரணமாக, அந்தக் கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
மருத்துவா்களின் ஆலோசனையின்படி கமலுக்கு வெள்ளிக்கிழமை அந்தக் கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை மற்றும் அதன் தொடா்ச்சியாக, சில நாள் ஓய்வுக்குப் பின் கமல் அனைவரையும் சந்திப்பாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.