தமிழ்நாடு

வேலூர் சிறையில் முருகனிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் எதிரொலி: சலுகைகள் ரத்து

DIN


வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகனின் அறையில் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிறையில் முருகனுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியிலுள்ள சிலர் செல்லிடப்பேசி பயன்படுத்துவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து சிறைக் காவலர் ராஜேந்திரன் தலைமையில் செல்லிடப்பேசி தடுப்புக் குழுவினர்  வெள்ளிக்கிழமை மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முருகன் அறையில் இருந்து ஒரு செல்லிடப்பேசி, ஒரு சிம்கார்டு, மெமரி கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. 
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் முருகன் மீது சிறைத்துறை சட்டப்பிரிவு 42-இன் (சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துதல்) கீழ் பாகாயம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டு முருகன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் இருந்து செல்லிடப்பேசி ஒன்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸôர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 
வேலூர் நீதித்துறை நடுவர் (எண் 1) மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி கடந்தாண்டு முருகன் விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் முருகன் அறையிலிருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியது:   உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முருகன் அவரது மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் சந்தித்து பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
தற்போது முருகன் அறையில் இருந்து செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த சலுகை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், முருகனை அவரது வழக்குரைஞரைத் தவிர வேறு யாரும் பார்த்து பேசவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஊழலின் பொருள் காங்கிரஸும், ஆம் ஆத்மியும்: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT