முகப்பு
தமிழ்நாடு

பக்தர்கள் இன்றி நடைபெறும் சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா!

பொதுமுடக்கம் காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசுத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
ஆடித்தவசு நிகழ்வையொட்டி அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்கள்
பகிர்:

பொதுமுடக்கம் காரணமாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தவசுத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. 

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஆடிமாதம் ஆடித்தவசுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருவார்.

ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி 11 ஆம் திருநாளான்று நடைபெறும். அப்போது சுவாமி, சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுப்பார். பின்னர் இரவு 12 மணியளவில் சங்கலிங்கசுவாமியாக அம்பாளுக்கு காட்சிக் கொடுப்பார். சிவனும், விஷ்ணுவும் ஒன்று என இந்த உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்நிகழ்வு நடைபெறும்.

இந்தக் காட்சிகளைக் காண தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருவர். வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் விடுப்பு எடுத்து வந்து ஆடித்தவசுத் திருவிழாவை கொண்டாடுவார்கள். ஆடித்தவசுக் காட்சி அன்று மொட்டை போட்டு காதுகுத்துதல், மாவிளக்கு எடுத்தல், தேள் பூரான் வாங்கி செலுத்துதல், தொட்டில் கட்டுதல், புற்றுமண் எடுத்து பூசுதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை பொதுமக்கள் செலுத்துவார்கள்.

இத்தகைய ஆடித்தவசுக் காட்சி பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஆடித்தவசுக் காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறு கோயில்களில் வழிபாடு நடத்தலாம் என தமிழக அரசு அறிவி்த்திருப்பதால் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும் என சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் 4 வழிகளும் கம்புகளைக் கட்டி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் கோவில் முன்பு மொட்டை போட்டு காதுகுத்தி செல்கின்றனர்.

ஆனால், பக்தர்கள் இன்றி கடந்த 10 நாள்களும் தினமும் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இன்றும் ஆடித்தவசுக் காட்சி பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் இன்றி நடைபெறும் இந்த ஆடித்தவசு நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →