புயல் மழை தாக்கத்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்களும், 550 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியக் குழு ஆய்வு நடத்தியது.
நாகை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அதில்,
நிவர் மற்றும் புரெவி புயலால் நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும், தோட்டக்கலை பயிர்களும் பாதிக்கப்பட்டிருந்தன. கூடுதல் பாதிப்புக்கு உள்ளான நாகை மாவட்டம் கருங்கண்ணி மற்றும் வடக்கு பனையூரில் மத்திய உள்துறை அமைச்சர் இணை செயலாளர் அசுடோஷ் அக்கிஹோத்ரி, மத்திய வேளாண் துறை அமைச்சக இயக்குனர் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சக துணை இயக்குனர் அமித் குமார், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் சுபம்கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உதவி ஆணையாளர் மோகித், மத்திய மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய நீர்வள ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
அப்போது கடன் வாங்கி நட்டு வைத்த பயிர்கள் அனைத்தும் மழை வெள்ள நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினரிடம், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று விவசாயிகளும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணனும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஸ் அக்னி கோத்ரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆய்வுக்குப் பின் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் அளித்த பேட்டியில்,
புயல் மழை தாக்கத்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்களும், 550 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், கொள்ளிடம், நள்ளம்மல், கருங்கண்ணி, வடக்கு பனையூர் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரவின் நாயர் கூறினார்.
மத்தியக் குழுவின் ஆய்வில் பங்கேற்ற கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில்,
புயல் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மத்தியக் குழு மத்திய மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்து நிவாரணம் பெற்றுத் தர வேண்டும், இலவசமாக அனைத்து விவசாயிகளுக்கும் மறு சாகுபடி செய்ய இலவசமாக விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஒவ்வொரு முறையும் பேரிடர் பாதிப்புகளில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டு சென்றுவிடுவது போல அல்லாமல், இந்த முறை கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.