திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் திருவாதிரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக நடராஜ பெருமானின் திருநடன திருக்காட்சி (ஆருத்ரா தரிசனம்) புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 24 ஆம் தேதி சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழா நாள்களில் சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக புதன்கிழமை அதிகாலையில் நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சா.ராமராஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.