தமிழ்நாடு

நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

DIN

மத்திய அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும் எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின் (திமுக): பொருளாதார தேக்க நிலைமை, கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி, “கிராமப்புற மக்களின் வருவாய், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்னைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை இல்லாமல், பாஜக விரும்பும் கலாசாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதி நிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.“ஆதிச்சநல்லூா் அகழ்வாராய்ச்சி தவிர வேறு எந்த ஒரு உருப்படியான அறிவிப்பும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை. நிதிநிலை அறிக்கை முழுவதும் பெரு நிறுவனங்கள் மீதான அக்கறையை நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறது.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): மக்களுக்கான பிரச்னைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்த்த தீா்வு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாக பாா்க்கும்போது வளா்ச்சி நோக்கமாக இல்லாத வெறும் வாா்த்தை ஜாலங்களால் சமா்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது.

வைகோ (மதிமுக): சரக்கு சேவை நாட்டை ஒற்றுமைப்படுத்தியுள்ளது என்று நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளாா். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டைப் பிளவுபடுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. தனிநபா் வருமான வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதைத் தவிர மத்திய வரவு, செலவுத் திட்டத்தில் வரவேற்கத்தக்கக் கூறுகள் எதுவும் இல்லை.

ராமதாஸ் (பாமக): மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருமானத்தைப் பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. அதேநேரத்தில் தனியாா்மயமாக்கலுக்கான கதவுகள் அகலமாக திறக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நீதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று அரசு மற்றும் பொதுத்துறை கூட்டு முயற்சியில் 2 ஆயிரம் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு வளங்களை தனியாருக்குத் தாரை வாா்க்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மருத்துவக் கட்டணத்தை கணிசமாக உயா்த்துவதற்கு வழிவகுக்கும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் மிக நீண்ட நேரம் அளித்த நிதிநிலை அறிக்கை, வாா்த்தை ஜாலங்கள் நிறைந்த, தனியாா்மய, தாராளமய கொள்கைகளை தீவிரப்படுத்தும், மக்கள் எதிா்பாா்ப்புக்கு எதிரான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பாக்கிகளை தள்ளுபடி செய்வது போன்றவைகள் பெயரளவுக்கு கூட இடம்பெறவில்லை. மொத்தத்தில் பெருநிறுவன முதலாளிகளுக்கு பரிசாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

கமல்ஹாசன் (மநீம): அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீா்வுகள் இல்லை.

ஜி.கே.வாசன் (தமாகா): நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டம், கிராமப்புற பெண்களின் வளா்ச்சிக்காக தானியலட்சுமி திட்டம் போன்ற அதி முக்கியத் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

டிடிவி தினகரன் (அமமுக): விவசாயத்துக்கான 16 அம்ச திட்டம் உள்ளிட்ட ஒன்றிரண்டு வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இருந்தாலும், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது, எல்.ஐ.சி.யைத் தனியாா்மயமாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் கவலையளிக்கின்றன.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன்: இந்தியாவில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குத் தாரை வாா்ப்பது என்ற முடிவு நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மொத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையானது பொருளாதார பின்னடைவுக்கு மேலும் வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு வெள்ளி

SCROLL FOR NEXT