தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்திடக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: இரா.முத்தரசன்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்திடக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
குடியுரிமை சட்டத்தை திருத்தி மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானது.
இதன் விளைவாக நாடு முழுவதும் உணர்ச்சிமிக்க தன்னியல்பான போராட்டங்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.
பேரணி - ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்சி, சாதி, மத, பாலின வேறுபாடுகள் இன்றி மிகுந்த எழுச்சியோடு பங்கேற்று வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு மதிப்பளித்திட வேண்டியது மத்திய அரசின் ஜனநாயகக் கடமையாகும். மாறாக கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு போராட்டத்தை ஒடுக்க முயன்று வருகின்றது.
இதுவரை 21 பொதுமக்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகி உள்ளனர் என்பது மிகுந்த கவலைக்குரியது.
கண்ணீர் புகை வீச்சு, தடியடி, கைது, வழக்கு, துப்பாக்கி சூடு என தனது கொடிய அடக்குமுறை மூலமாக, தான் நினைத்ததை நிறைவேற்றிட அரசு முயன்று வருகிறது. இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாகும். மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இத்தகைய நிலையில், நாட்டிற்கே நல்லதொரு முன்னுதாரணமாக கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று ஜனநாயக முறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் குடியுரிமை சட்டத்திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என முன்மொழிந்து, அதன் மீது ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் விவாதித்து, முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்று, பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர்.
இந்திய மக்கள் மீது மத்திய அரசு திணித்துள்ள அரசியல் சாசன விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அரசியல் சாசன அடிப்படைகளுக்கு எதிரான சட்டத்தை நிராகரிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும்.
நாட்டிற்கே நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள கேரள அரசை வரவேற்று பாராட்டுகின்றோம். கேரளாவை தமிழகம் பின்பற்ற வேண்டுமென கோருகின்றோம்.
இம்மாதம் 6-ம் நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையின் இவ்வாண்டின் முதல் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
இக் கூட்டத்தொடரில், நாட்டின் நலன் கருதி, மக்கள் ஒற்றுமைக்கு, முன்னுரிமை அளித்து, மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்கின்ற நல்ல செய்தியை நாட்டிற்கே எடுத்துக்காட்டும் விதமாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் வழிநின்று ஆட்சி நடத்தும் டாக்டர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, பிரதான எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வழிமொழிந்து எதிர்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடல் வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னதானம்...

மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டம்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

SCROLL FOR NEXT