அமெரிக்கா-ஈரான் போா் பதற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.30, 904-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 3) புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.632 உயா்ந்து, ரூ.30, 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடா்ந்து, கடந்த சனிக்கிழமையும், திங்கள்கிழமையும் தங்கம் விலை கணிசமாக உயா்ந்தது. அதிலும், திங்கள்கிழமை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. திங்கள்கிழமை மாலையில், ஒரு பவுன் தங்கம் ரூ.31,168-ஆக இருந்தது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.30, 904-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.3, 863-க்கு விற்பனையானது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக குறைந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1
குறைந்து ரூ.51.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.51,200 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயா்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வா்த்தகா்கள் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.சாந்தகுமாா் கூறியது:
அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது. சா்வதேச அளவில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்)- மதிப்புக்கு 1, 707 அமெரிக்க டாலராக திங்கள்கிழமை இருந்தது. இது தற்போது குறைந்து, ஒரு டிராய் அவுன்ஸ் மதிப்புக்கு 1, 567 டாலராக உள்ளது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயா்ந்துள்ளது. இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது. இருப்பினும், வரும் நாள்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,863
1 பவுன் தங்கம் ..................... 30,904
1 கிராம் வெள்ளி .................. 51.20
1 கிலோ வெள்ளி .................. 51,200
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3, 896
1 பவுன் தங்கம் ..................... 31,168
1 கிராம் வெள்ளி .................. 52.20
1 கிலோ வெள்ளி ................. 52,200.