ராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து 78 நாள்களுக்குப் பின் 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் திங்கள்கிழமை கரை திரும்பினர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இன பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக முன்கூட்டியே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்நீரினை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 1700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இதில் 90 சதவீதம் விசைப்படகுகள் பாக்நீரினை பகுதியில் மீன்பிடித்தும்,10 சதவீதம் விசைப்படகுகள் மட்டும் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இதில் 80 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பெரிய அளவிலான மீன்களை மட்டுமே பிரதானமாக பிடித்து வருகின்றனர். மற்ற விசைப்படகுகள் அனைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால், கனவாய், நண்டு உள்ளிட்ட மீன்வகைகளை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இறால் மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் வரும் 13-ஆம் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என இறால் பிடித்து வரும் மீனவர்களை கேட்டுக்கொண்டனர். இதன் அடிப்படையில் இறால் பிடிக்கும் மீனவர்கள் வரும் 13-ஆம் தேதி மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.
இந்நிலையில், பாம்பன் தெற்குவாடி பகுதியில் பெரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஞாயிற்றுகிழமை மீன்வளத் துறை அலுவலர்களிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
78 நாள்களுக்கு பின்னர் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு பாறை மீன், சீலாமீன், ஓரியா, பால்சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் திங்கள்கிழமை காலை கரை திரும்பினர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகளவில் வியாபாரிகள் மீன்வாங்க வந்ததால், பிடித்து வந்த மீன்களை நல்ல விலைக்கு ஏலம் விற்றனர்.
அதிகளவில் மீன்கள் கிடைத்ததுடன், நல்ல விலையும் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.