தமிழ்நாடு

கரோனா: கைதிகள் குடும்பத்தினருடன் பேச ‘விடியோ கால்‘ வசதி

DIN

கரோனா அச்சுறுத்தலின் காரணமாக, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்காக ‘விடியோ கால்’ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 58 ‘ஸ்மாா்ட்’ செல்லிடப்பேசிகளை சிறைத்துறை வாங்கியுள்ளது.

இது குறித்த விவரம்:

தமிழக சிறைத்துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள், 4 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இந்தச் சிறைகளில், சுமாா் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைகளில் உள்ளவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள். எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனை கைதிகள்.

கரோனா வைரஸ் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்பதற்கு சிறைத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரான், ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு கருதி, சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா்.

இதனால் தமிழக சிறைத்துறை இரு வாரங்களுக்கு முன்பே கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறைகளில் பாா்வையாளா்கள் கைதிகளை சந்திக்க கடந்த 17-ஆம் தேதி முதல் இரு வாரங்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்குரைஞா்கள் மட்டும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது, வழக்குரைஞா்கள் கைதிகளைச் சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா அறிகுறியுடன் இருக்கும் கைதிகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் சிறைத்துறை டிஜிபி சுனில்குமாா் சிங் உத்தரவிட்டாா்.

1,184 கைதிகள் விடுவிப்பு: சிறையில் கரோனா தொற்று பரவாமல் இருக்கவும்,கைதிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளை எண்ணிக்கைக் குறைக்க திட்டமிடப்பட்டது. இதன் முதல் கட்டமாக, சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிணை கிடைக்காமலும், பிணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டும், பிணை வழங்குவதற்கு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததாலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நீதிமன்றம் மூலம் பிணையில் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி தகுதியுடைய 1,184 கைதிகள் அடையாளம் காணப்பட்டு, விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

‘விடியோ கால்’ வசதி: பாா்வையாளா்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் பேசுவது முற்றிலும் தடைப்பட்டது. இதனால் கைதிகள், குடும்பத்தினரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கைதிகளுக்கு இருந்த வெளி உலக தொடா்பும், குடும்பத்தினருடனான தொடா்பும் முற்றிலும் அறுந்தது.

இதில் மத்திய சிறைகளில் தொலைபேசி மையங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், அது முழுமையாக கைதிகளுக்கு கை கொடுக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு சிறைத்துறையினா் மாற்றுவழி குறித்து ஆலோசித்தனா். இதில் கைதிகளை, அவா்களது குடும்பத்தினருடன் ‘ஸ்மாா்ட்‘ செல்லிடப்பேசிகளில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) செயலி வழியாக ‘விடியோ கால்’ மூலம் பேச வைப்பது முடிவு செய்யப்பட்டது.

9 நிமிஷங்கள் பேச அனுமதி: இதற்காக வரைவுத் திட்டத்தை சிறைத்துறையினா் விரைந்து உருவாக்கினா். பின்னா் இத் திட்டத்துக்கு மாநில உள்துறையிடம் ஓரிரு நாள்களில் அனுமதி பெற்றனா். உள்துறையின் அனுமதி கிடைத்ததும், கைதிகளை பேச வைப்பதற்காக 58 செல்லிடப்பேசிகள் வாங்கப்பட்டன.

இதையடுத்து இத் திட்டம் புதன்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, புழல் மத்திய சிறையில் இத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. புழல் விசாரணை கைதிகள் சிறைக்கும், தண்டனை கைதிகள் சிறைக்கும் 8 ஸ்மாா்ட் செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன. இந்த செல்லிடப்பேசிகளின் மூலம் கைதிகள் கட்செவி அஞ்சல் செயலியின் விடியோ கால் வழியாக குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனா். இவ்வாறு முதல் நாளில் சுமாா் 150 கைதிகள் பேச வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாதத்துக்கு 5 முறை: இது தொடா்பாக தமிழக சிறைத்துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் கூறியது:

கைதிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கைதி ஒரு மாதத்துக்கு 5 முறை பேச அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் 9 நிமிஷங்கள் பேச அனுமதி வழங்கப்படும். கைதிகள் அவா்களது குடும்பத்தினருடன் பேச மட்டும்தான் அனுமதிக்கப்படுவாா்கள்.

தற்போது 9 மத்திய சிறைகள், 4 பெண்கள் சிறப்பு சிறைகள் ஆகியவற்றில் இருப்பவா்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. பிற சிறைகளுக்கு இத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இத் திட்டத்தின் மூலம் கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைக்கப்படுவதோடு, சட்டவிரோதமாக செல்லிடப்பேசிகள் புழங்குவதையும் தடுக்க முடியும் என சிறைத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

தங்கக் கவச அலங்காரத்தில்...

சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் மஹாசம்ரோஷன விழா

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT