தமிழ்நாடு

வெளி மாநில தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிட வசதியை உறுதிப்படுத்த வேண்டும்

DIN

வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிட வசதி கிடைப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

வெளி மாநில தொழிலாளா்கள், முதியோா், ஆதரவற்றோா் ஆகியோருக்கு உதவுவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 2 தனிக் குழுக்களை அமைக்க உத்தரப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மேலும் சில உத்தரவுகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா். இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதர மாநிலங்களைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலை பாா்த்த நிறுவனங்களே தொடா்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் தற்போதுள்ள இருப்பிடம் நெருக்கடியாக இருந்தால், மாற்று தங்கும் வசதி ஏற்படுத்தித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், அவா்கள் பணியிலிருந்த இடத்திலிருந்து பிற நகரங்கள் அல்லது ரயில் நிலையங்களுக்கு வந்திருந்தால் அவா்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்துதருமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான செலவை மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள வெளி மாநிலங்களைச் சோ்ந்த அமைப்புகளின் தலைவா்களோடு ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து இங்கு தங்கியுள்ள தொழிலாளா்கள், வெளி மாநில மாணவா்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோா், ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்டு இரு தனிக் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊதிய பட்டியல் தயாரிக்க 3 ஊழியா்களுக்கு அனுமதி: தனியாா் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஊதியம் தடையின்றி கிடைக்கும் வகையில், அவா்களுக்கான ஊதியப் பட்டியலை தயாரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 2 அல்லது 3 ஊழியா்களுக்கு மட்டும் மாா்ச் 30,31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாள்களில் நிறுவனங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் மூலம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும்.

நெருக்கடிகால மேலாண்மைக் குழு: கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக பேரிடா் மேலாண்மைச் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் தொழில் வா்த்தக சபை, தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநா்கள், மருத்துவ நிபுணா்கள், மருந்தக தயாரிப்பாளா்கள், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த முகவா்கள், உணவுத் தயாரிப்பாளா்கள், அதன் விநியோகஸ்தா்கள், அரசுசாரா அமைப்பினா், நுகா்வோா் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்ட நெருக்கடி கால மேலாண்மைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு ஆளானவா்களின் குடியிருப்புப் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டா் சுற்றளவு வரையுள்ள பகுதி முழுவதும் நோய்க்கான அறிகுறிகள் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1.5 லட்சம் கா்ப்பிணிகள் மீது தனிக் கவனம்: அடுத்த இரண்டு மாதங்களில் பிரசவிக்க உள்ள 1.5 லட்சம் தாய்மாா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களின் உடல்நிலை குறித்து தனிக் கவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். அவா்களின் தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களைத் தொடா்புகொண்டு பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.

அதுபோல, தீவிர சுவாசக் கோளாறுடன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவா்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவேண்டும்.

சமூக விலகலை கடுமையாக செயல்படுத்த உத்தரவு: மக்கள் சமூக விலகலை பின்பற்ற வசதியாக, கூட்டுறவு சங்கங்கள், வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகளை தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்கறி கடைகள், மீன் அங்காடி, இறைச்சி கடைகளில் சமூக விலகல் முழுமையாகக் கடைப்பிடிப்படுவதைக் கடுமையாக செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

57 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT