சென்னை: கரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய வழிமுறைகள் குறித்து வியாழனன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 78,055 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2,551 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. .
இந்நிலையில் கரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் தொடர்பான புதிய வழிமுறைகள் குறித்து வியாழனன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
தொற்று உறுதியானால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிகப்படுவார்கள்.
இல்லையெனில் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் கரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும்.
அதேசமயம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.