மயிலாடுதுறை: மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இருதய சிகிச்சை முகாமை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.
மயிலாடுதுறை டெல்டா ரோட்டரி சங்கம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி சுகாதார மையம், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை, ஐஸ்வர்யா அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச இருதய முகாம் குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.பாலாஜி பாபு முன்னிலை வகித்தார். பள்ளி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயராஜ், செயலர் வேணுகோபால், பொருளர் மோகன், திட்ட இயக்குனர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிச் செயலர் ஆர்.செல்வநாயகம் வரவேற்றார். பள்ளிச் செயலர் வி.பாஸ்கரன் நன்றி கூறினார்.
முகாமில், எம்.ஜி.எம் மருத்துவமனை இருதய சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பிரதீப், விவேகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஆர்.சிவராமன் உரிய ஏற்பாட்டினை செய்திருந்தனர். முகாமில் 200 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் முகாமின் முடிவில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
தேசிய மாணவர் படை அலுவலர் துரை.கார்த்திகேயன், என்.எஸ்.எஸ் அலுவலர்கள் நடராஜன், வடிவழகி மற்றும் சிசிசி சமுதாயக் கல்லூரி முதல்வர் ஆர்.காமேஷ் தலைமையிலான நர்சிங் மாணவர்கள் களப்பணி ஆற்றினர்.