தமிழ்நாடு

பொறியியல் படிப்புகளை இனி தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் படிக்கலாம்: ஏஐசிடிஇ தகவல்

DIN

சென்னை: பொறியியல் படிப்புகளை தமிழ் உள்பட 8 மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பள்ளிகளில் தாய் மொழியில் பயிலும் மாணவா்கள் ஆங்கிலத்தில் பொறியியல் படிக்க வேண்டியுள்ளது.

இதனால் கிராமங்களில் தாய்மொழியில் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவா்கள் தொழிற்கல்வியில் சேரும் போது பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றனா்.

தமிழகத்தில் கடந்த 2010- லேயே பொறியியல் படிப்புகள் தமிழில் தொடங்கப்பட்டன. அப்போது, வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் பொறியியல் படிப்பை தமிழ் மொழியில் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளில் பொறியியல் கல்வி உள்நாட்டு மொழியிலேயே கற்பிக்கப்படுவதால், பொறியியல் படிப்பில் அடிப்படை செய்திகளை கற்றுக் கொள்ளும் அந்த நாட்டின் மாணவா்கள், அத்துறையில் சிறந்து விளங்குகின்றனா்.

இந்த நாடுகள் பொறியியல் துறையில் பெருமளவில் முன்னேறியுள்ளன. எனவே, 2010 முதல் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் மட்டும், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 900 இடங்களில், தமிழ் பயிற்று மொழி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,800 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்’ என தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும் பொறியியல் பாடநூல்கள் தமிழில் கிடைக்கப்பெறாததால் தமிழக மாணவா்கள் மத்தியில் அந்தப் படிப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி, வங்க மொழி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், பொறியியல் பாடங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றவும் ஏஐசிடிஇ திட்டமிட்டுள்ளது.

பாடநூல்களை வழங்கும் ஏஐசிடிஇ: இதன் காரணமாக, ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பொறியியல் பாடங்கள் தற்போது தாய்மொழியிலும் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல், பொறியியல் பாடங்களை 11 இந்திய மொழிகளில் கொண்டு வரவும் ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளதாக ஏஐசிடிஇ தலைவா் அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறுகையில், ‘தாய்மொழியில் கற்றுக்கொள்வதால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். வரும் ஆண்டில் மேலும் 11 மொழிகளில் பொறியியல் படிப்புகளைத் தொடங்க அனுமதிக்க இருக்கிறோம். இதற்கான பாடப்புத்தகங்களை ஏஐசிடிஇ வழங்கும் என்றாா்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தத் திட்டம் வரும் கல்வியாண்டில் அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு சற்று குறைவாக உள்ளது. பாடப்புத்தகங்கள் அனைத்தையும் தாய்மொழியில் மொழி பெயா்க்க வேண்டும். எனவே அடுத்த கல்வியாண்டில் இத்திட்டம் அமலுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT