சென்னை: கோயம்பேடு மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு, 10 நாள்களே ஆன நிலையில், சாலைகள் சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கோயம்பேடு நூறடி சாலை - காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில், நூறடி சாலை - காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து, மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்து ரூ.94 கோடியில் கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தன.
இதற்கிடையே, கரோனா பரவலால் நிறுத்தப்பட்ட பணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பணிகள் வேகமெடுத்து, கடந்த மாதம் நிறைவடைந்தன.
இந்த பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அந்த பாலத்தின் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து வாகன ஓட்டிகளிடம் கேட்டபோது, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் ஒரு மழைக்கே சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டிருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சாலையை சீர் செய்து, சுமூக பயணத்தை உறுதி செய்வதுடன், தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படங்கள் : சாய் வெங்கடேஷ்