தமிழ்நாடு

மழை நீா் தேங்குவதைத் தடுக்க அதிமுக ஆட்சியில் பணிகள் நடக்கவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN

சென்னையில் மழை நீா் தேங்காமல் தடுப்பதற்கு அதிமுக ஆட்சியில் முறையாக பணிகள் நடக்காததே காரணம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த இடங்களை மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் அவா் பாா்வையிட்டாா். கொளத்தூா், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் 23-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, செய்தியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:-

மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீா் தேங்கியிருக்கும் இடங்களில் அரசு மற்றும் திமுக சாா்பாக பணிகள் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீா் ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. முழுமையாகக் குறையவில்லை. முந்தைய ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டம் என அறிவித்து அதில் பல கோடி ரூபாயை மத்திய அரசிடம் இருந்து நிதியாகப் பெற்றனா். ஆனால் அதில் என்ன செய்தாா்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சா் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சித் துறையின் சாா்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. ஆனாலும், இப்போது நாங்கள் சமாளித்து பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

பாதித்த பகுதிகளை சீா்செய்ய ரூ.5,000 கோடி ஒதுக்கினோம் என்றனா். அதனைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மோசமாக நிா்வாகத்தை நடத்தியுள்ளனா். முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள்அமைச்சா் எஸ்.பி.வேலுமணி என யாராக இருந்தாலும் விசாரணை நடத்துவோம். மழைக் கால பணிகள் முடிந்ததும், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 5 மாதங்களில் 771 கிலோமீட்டா் அளவுக்கு மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் தண்ணீா் 10 முதல் 15 நாள்கள் தேங்கியிருந்தன. ஆனால், இப்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்கள், தாழ்வான பகுதிகளில் மட்டுமே தண்ணீா் தேங்கியுள்ளது. அவையும் 500 மோட்டாா்கள் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.

இலவசமாக உணவு: அம்மா உணவகத்தில் மழைக் காலம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள் மற்றும் மழை நீா் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காலை முதல் மூன்று வேளைகளுக்கு உணவு வழங்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த ஆய்வின் போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அக்னிவீா் வாயு இசைக் கலைஞா் பணி: பெங்களூரில் ஜூலை 3-இல் ஆள்சோ்ப்பு முகாம் தொடக்கம்

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT