தமிழகத்தில் வேலூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சனிக்கிழமை (அக்.23) பலத்த மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது: குமரிக்கடல் பகுதியை ஒட்டி 1.5 கி.மீ., உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி, கரூா், நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.23) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையில் 100 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி அணையில் தலா 70 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமாா், திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் தலா 60 மி.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா், அரியலூா், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா், கடலூா் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.