தமிழ்நாடு

நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்குப் பயன்: மு.க. ஸ்டாலின்

DIN

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும் திறன் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (25.5.2022) இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான முதல் “இளைஞர் திறன் திருவிழா”வை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

முதல்வர் பேசுகையில், இந்த விழா மிக மிக ஒரு முக்கியமான விழா ஆகும். இளைஞர் விழா. அதுவும் இளைஞர் திறன் திருவிழா ஆகும். இளைஞர் என்றால், ஏதோ மாணவர்கள் என்று தான் பொருள் என்று நீங்கள் கருதிவிடக் கூடாது. ஏனென்று கேட்டால் நீங்களும் இருக்கிறீர்கள். மாணவியர்களும் இதில் அடக்கம் என்பது எல்லோரும் புரிந்து கொண்டாக வேண்டும். இளைஞர்கள் தான் இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அந்த நாட்டினுடைய வளர்ச்சி அமைந்துள்ளது.
அந்த வகையில் மற்ற நாடுகளுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறபோது 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நாடு எந்த நாடு என்று கேட்டால் நம்முடைய இந்தியா தான். அந்த இளைஞர்களை அனைத்து வகையிலும் திறமைசாலிகளாக அவர்கள் உருவாக்க வேண்டும். அதாவது இளைஞர் சக்தியை உருவாக்கி வைக்க வேண்டும். அதற்கு முக்கியமாக கல்வியை நாம் தந்தாக வேண்டும். அடிப்படைக் கல்வி மட்டுமல்ல, உயர் கல்வியும் தந்தாக வேண்டும். அப்படி கற்ற இளைஞர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ற வேலையை நாம் வழங்க வேண்டும். அப்படி வேலை பெற்றவர்கள், அதற்குரிய ஊதியத்தை அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை அமைத்துத் தருவதன் மூலமாக இந்த நாட்டுக்கு அவர்கள் தங்களது முழுத் திறமையையும்கொடுத்து உழைப்பார்கள்.

இத்தகைய உழைப்புச் சக்கரத்தைச் சரியாக உருவாக்கக்கூடிய அரசு தான் இன்றைக்கு உங்கள் அன்போடு, ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் இத்தகைய உழைப்புச் சக்கரத்தை உருவாக்கும் திட்டங்களாக அமைந்திருக்கிறது. 

2010-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநிலத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் (Tamil Nadu Skill Development Mission) என்ற தனித்துவம் வாய்ந்த ஒரு அமைப்பை அன்றைக்கு உருவாக்கினார்.

அப்போது தேசிய அளவிலோ அல்லது பிற எந்த மாநிலத்திலோ இத்தகைய திறன் மேம்பாட்டிற்கான தனி அமைப்பு எதுவும் கிடையாது. நமது மாநிலத்தில் முன்னோடி திட்டமாக இத்தகைய தனி அமைப்பை ஏற்படுத்தி பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழக்கூடிய ஒரு சூழ்நிலையை அன்றைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்.

இந்நிறுவனம் அனைத்து வகையான திறன் பயிற்சிகளை வழங்கும் முதன்மை அமைப்பாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் இளைஞர்களின் தொழிற்திறன் மேம்பாட்டுக்கான சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனுடைய அடுத்தகட்ட வளர்ச்சியாகத் தான் எல்லோரும் குறிப்பிட்டது போல 'நான் முதல்வன்' என்ற அந்தத் திட்டத்தை அறிவித்தேன். நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்களும், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த பெயரை நாம் சூட்டி இருக்கிறோம். ஒரு பக்கம் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலைமை, இன்னொரு பக்கம் இருக்கும் வேலைக்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்ற ஒரு நிலைமை. இந்த இரண்டையும் இல்லாமல் ஆக்குவதற்காகத்தான் இன்றைக்கு நம்முடைய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான புதிய நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். புதிய தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அதற்கேற்ப நம்முடைய இளைஞர்களைத் தயார்படுத்திட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன் துவங்கப்பட்ட கனவுத் திட்டம்தான் “நான் முதல்வன்” என்கின்ற அந்தத் திட்டம்.

அதேபோல் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். அந்த விருப்பங்களை வளர்த்தெடுக்கவும் இத்திட்டம் அடிப்படையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஐந்து லட்சம் இளைஞர்களின் கல்வி, அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகள் கண்டறியப்பட்டு, அவர்களை மேம்படுத்த ‘நான் முதல்வன்’ என்ற அந்த மகத்தான திட்டத்தை கடந்த 01.03.2022 அன்று நான் துவக்கி வைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.

மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப வேலைவாய்ப்பினைப் பெற்று தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திறன்பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். அதனால்தான் என்னுடைய நேரடிப் பார்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கியிருக்கிறது. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும் திறன் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களும் மாற்றப்பட இருக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, அரசுக் கல்லூரிகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதற்கேற்ற பயிற்சிகளை வழங்கிடப் பெருநிறுவனங்களோடு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெறக்கூடிய திறன் பயிற்சிகள் நடத்தப்பட இருக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாறிவரும் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களுடன் இணைந்து செயல்பட, தமிழ்நாட்டில் அதிக அளவிலான தொழில் நிறுவனங்கள் கொண்ட துறைகளில் திறன்மிகு மையங்களை உருவாக்குதல், 21-ஆம் நூற்றாண்டிற்கான திறன்கள் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வழங்கி நமது இளைஞர்களைத் திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நம்முடைய மாநிலத்தினுடைய இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த அரசு நிச்சயமாக செயல்படும். இதற்குச் சான்றாக நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், உலகத்திறன் போட்டிகளில் பங்குபெறும் விதமாக மாநிலத்தில் திறன்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 32 மாணவர்கள் ஜனவரி 2022-ல் புதுடில்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான இறுதிப்போட்டியில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். பெருமையோடு சொல்கிறேன், அந்த 32 பேரில் 23 பேர் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இதுபோல், அதிக பதக்கங்களை தமிழகம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இது இந்த அரசு திறன்மேம்பாட்டில் செலுத்திய அக்கறைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
2006-07ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரைக்கதிர்

ஸ்பைசி சப்பாத்தி

வரகு வடை

சோயா ஃபிரைட் ரைஸ்

ஓட்ஸ் பாயசம்

SCROLL FOR NEXT