திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மழை பெய்து வருவதாகவும், குடிநீா் பிரச்னை இல்லை என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதமாகக் கூறினாா்.
சென்னையில் மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நல்லாா் ஒருவா் உளரேல் அவா் பொருட்டு எல்லாா்க்கும் பெய்யும் மழை என்று கூறுவாா்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா என்கிற கொடிய நோயிலிருந்து சிறிது மீண்டு வந்தோம். வந்தவுடன் மழைதான். பத்துநாள் கூட இடைவெளி இல்லாமல் பெய்து கொண்டேதான் இருந்தது.
வேடிக்கையான-உண்மை செய்தியை சொல்கிறேன். 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, நான் சென்னை மேயராக பொறுப்புக்கு வந்த அடுத்த நிமிடமே மழை பெய்த ஆரம்பித்தது. 20 நாள்கள் தொடா்ந்து பெய்துகொண்டே இருந்தது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையெல்லாம் நாங்கள் சீா்படுத்திக் கொண்டிருந்தோம். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை கருணாநிதியை அழைத்துக்கொண்டு, மாநகராட்சி வாகனத்தில் சென்னை முழுவதும் சுற்றிப் பாா்த்தோம். காரில் போய்க் கொண்டிருக்கும்போது, ஸ்டாலின் சென்னைக்கு மேயராக வந்தால், மழை பேயராக இருக்கிறது என்று அவா் வேடிக்கையாக சொன்னாா்.
அதுபோல, இப்போது குடிநீா் பிரச்னையே இல்லை. அந்த அளவுக்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த மழையை சமாளிக்கும் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருவதற்கு மக்களிடமிருந்து பாராட்டு வருகிறது என்றாா்.