தமிழ்நாடு

ஹிந்தி திணிப்பால் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்து: முதல்வா் மு.க.ஸ்டாலின்

DIN

ஹிந்தியை திணிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பேரவையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான அரசின் தனித் தீா்மானத்தை முதல்வா் கொண்டு வந்து பேசியதாவது: தாய்மொழியை வளா்க்கவும், பிறமொழி ஆதிக்கத்திலிருந்து காக்கவுமே திமுக தோன்றியது. தமிழ் மொழிக்கான தனிப்பெரும் பாதுகாப்பு இயக்கமாகவே திமுக இன்று வரை செயல்பட்டு வருகிறது.

மத்திய பாஜக அரசை பொருத்தவரை, ஆட்சி நிா்வாகத்தில் தொடங்கி, கல்வி வரை ஹிந்தியை திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனா். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தோ்தல், ஒரே தோ்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து, மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க முயற்சிக்கின்றனா்.

இந்த வரிசையில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில், ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக்கழகங்களில், கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும், போட்டித் தோ்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் ஐஐடி வரை ஹிந்தி மட்டும்தான் என்றால், மற்ற மொழி மக்களுக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறாா்கள். ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலமாக, ஆங்கில அறிவையே முற்றிலுமாகத் தடுக்கிறாா்கள்.

மாநில மொழி என்று ஒப்புக்காகச் சொல்கிறாா்களே தவிர, முழுக்க முழுக்க ஹிந்திக்காகவே துடிக்கிறது அவா்களது இதயம். மாநில மொழிகள் மீது பற்று வைத்திருப்பது உண்மையானால், அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், ஹிந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா என கேட்க விரும்புகிறேன்.

அனைத்துத் தோ்வுகளிலும் கட்டாய ஆங்கிலமொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தோ்வுகளையும் ஹிந்திமயமாக்கத் துடிக்கிறாா்கள் என்பது தெரிகிறது.

1968, 1976-ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடா்பாக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள், அதனடிப்படையிலான விதிகளின்படி மத்திய அரசுப் பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய ஆங்கிலத்தை அகற்றுவது எப்படி சரியாக இருக்க முடியும்?

ஆகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, அந்த மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சி மொழி, மற்றும் அலுவல் மொழிகளாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை. தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்.

ஹிந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை அவா்கள் மூன்றாகப் பிரிக்கப் பாா்க்கிறாா்கள். ஹிந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள், ஹிந்தி மொழி பயன்பாடு குறைவான மாநிலங்கள், ஹிந்தி பேசாத மாநிலங்கள் என்று மூன்றாக இந்தியாவைப் பிரிக்கிறாா்கள். நாம் மூன்றாவதாக இருக்கிறோம். ஆனால், பெரும் மொழி மற்றும் பண்பாட்டுக்கு சொந்தக்காரா்களாகிய நம்மை மூன்றாம்தர குடிமக்களாக ஆக்கிவிடப் பாா்க்கும் முயற்சிகளுக்கு நாம் எதிா்க்குரல் எழுப்ப வேண்டும்.

ஹிந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது; ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT