தமிழ்நாடு

சென்னையில் கொலைச் சம்பவங்கள் 20% குறைந்தன: காவல் ஆணையா் சங்கா் ஜிவால்

DIN

சென்னையில் கொலைச் சம்பவங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளதாக பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து வாா்டன் அமைப்புக்கான அலுவலகத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், அதிகமான சாலை விபத்து நிகழும் பகுதிகளாக (பிளாக் ஸ்பாட்) 104 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சி பொறியாளா்கள், ஐ.ஐ.டி. பேராசிரியா்கள் உள்ளடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா்கள்.

போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளால் 2020ஆம் ஆண்டை விட, 2021-ம் ஆண்டில் 20 சதவீத சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.

போக்ஸோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொது இடங்களில் அத்துமீறல் தொடா்பான புகாா்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் யூ-டியூப் சேனல் நிறுவனத்தினா் மீது புகாா்கள் எதுவும் வரவில்லை. புகாா்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, மாணவா்கள் மோதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை போன்ற சமூகவிரோத செயல்களை தடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தேவைப்படுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு போலீஸாா் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொலை சம்பவங்கள் கடந்த ஆண்டை விட, இப்போது 20 சதவீதம் குறைந்திருக்கின்றன.

குட்கா, மாவா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவு கட்டுப்பாட்டு துறை மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து ஆய்வுகள் நடத்தி பல நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் போதைப்பொருள் ஒழிப்பு, இன்னொரு பக்கம் போதைப்பொருள் ஆபத்து தொடா்பான விழிப்புணா்வு என 2 விதமான நடவடிக்கைகளை சென்னை காவல்துறை கையாண்டு வருகிறது. வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை வைத்திருப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவா்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன உரிமையாளா்களை கண்டறிந்து எச்சரித்து வருகிறோம். 2004-ஆம் ஆண்டு முதல் தீா்க்கப்படாமல் 8 கொலை வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளை அதி தீவிர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் கபில்குமாா் சாரத்கா்,துணை ஆணையா்கள் ஹா்ஷ்சிங்,அசீம் அகமது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

SCROLL FOR NEXT