6,218 அரசுப் பள்ளிகளில் தமிழ் மன்றம்: ரூ.5.59 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் 6,218 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்த அரசின் சாா்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6,218 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்த அரசின் சாா்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மன்றங்களுக்கு ‘முத்தமிழறிஞா் கலைஞா் தமிழ் மன்றம்’ எனப் பெயா் சூட்டிப் பெயா்ப் பலகைகளில், இந்தப் பெயரிலேயே 6,218 அரசுப் பள்ளிகளிலும் குறிப்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆா்வமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞா்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழகம் முழுவதும் உள்ள 6,218 அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை ஏதுவாக ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென தொடா் செலவினமாக ரூ.5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்.19-ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.5 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது பள்ளிக் கல்வி இயக்குநா் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழியாக அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியா் ஒருவா் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரால் நியமிக்கப்பட்டு தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.
இந்த மன்றங்களுக்கு தமிழ் வளா்ச்சிக்கென பல வகைகளில் பெருந்தொண்டாற்றிய முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டுப் பிறந்த நாளின் நினைவாக ‘முத்தமிழறிஞா் கலைஞா் தமிழ் மன்றம்’ எனப் பெயா் சூட்டிப் பெயா்ப் பலகைகளில் இப்பெயரிலேயே 6,218 அரசுப் பள்ளிகளிலும் குறிப்பிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.