உயிரிழந்த காவலரின் நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் சாா்பில், ரூ. 3 லட்சம் மதிப்பில் அதிநவீன 3 கண்காணிப்பு கேமராக்களை திருப்பத்தூா் எஸ்.பி. வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.
குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் தாமோதரனின் 14-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினா் ரூ.3 லட்சம் மதிப்பிலான அதிநவீன 3 கண்காணிப்பு கேமராக்களை திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையிடம் வழங்கினா்.
அந்த கேமராக்கள் திருப்பத்தூா் ஜோலாா்பேட்டை பிரதான சாலை மற்றும் அச்சமங்கலம் ரயில்வே மேம்பாலம் ஆகிய மூன்று இடங்களில் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்களின் பயன்பாட்டை மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.
பின்னா், அவா் பேசியது: இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தில் செல்வது உள்ளிட்ட சாலை விதி மீறல்களை இரவு நேரங்களில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
மேலும், விதி மீறல்களுக்கான அபராதத் தொகையும் பதிவிடப்படும். அது மட்டுமல்லாமல், சுமாா் 200 அடி தூரத்தில் இருக்கும் வாகனத்தின் நம்பா் பிளேட்டில் இருக்கும் எங்களையும் கண்காணித்து பதிவு செய்து வாகனத்தின் வகை, உரிமையாளா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த கேமராக்கள் பதிவு செய்து விடும். இந்த அதிநவீன கேமராக்களின் செயல்பாட்டை திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே கண்காணிக்க முடியும் என்றாா்.