தமிழ்நாடு

ஒடிசா விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை

DIN

சென்னை: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. இவர்களது முகவரிகளை ரயில்வே நிர்வாகத்திடம் பெற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. மேலும், மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுபபாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களின் பெயர் மற்றும் வயது விவரம்: 
1. நாரகணிகோபி(34)
2. கார்த்திக்(19)
3. ரகுநாத்(21)
4. மீனா(66)
5. எ. ஜெகதீசன்(47)
6. கமல்(26)
7 கல்பனா(19)
8. அருண்(21)

தகவல்களை, மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்களான, கட்டணமில்லா தொலைபேசி – 1070 மற்றும் செல்பேசி – 9445869843 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

SCROLL FOR NEXT