அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை ஒரு மாதத்திற்கு பின் வனத்துறையினர் பிடித்தனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சின்ன கனல் பகுதியில் மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
இந்த யானையை தமிழகத்தை ஒட்டிய கண்ணகி வனக்கோட்டம் அருகே கேரள வனப்பகுதி பெரியாறு புலிகள் காப்பகம் மலைப்பகுதியில் விட்டுச்சென்றனர். அதன் பின் கடந்த ஒரு மாதமாக தமிழக பகுதியான ஹை வேவிஸ் -மேகமலை, லோயர் கேம்ப், கம்பம் மற்றும் சண்முகா நதி அணை, பூசாரி கவுண்டன்பட்டி, பெருமாள் மலைப் பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வந்தது.
இதனை அடுத்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பூசாரி கவுண்டன்பட்டி அருகே உள்ள பெருமாள் மலையில் 5 பேர் கொண்ட கால்நடை மருத்துவர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் காட்டு யானையை பிடித்தனர்.
இந்நிலையில், அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்படவுள்ளதாகவும், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.