நெய்வேலி: கடலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் 4.0 திட்டத்தின் மூலம் ரூ.3.73 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தொழிற்பயிற்சி கட்டடத்தினை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
தமிழக நிதிநிலை அறிக்கையில் 2021-2022-இல் தொழிற்பயிற்சி நிலையங்களில் இளைஞர்களுக்கு நவீன தரத்தை, உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிட தொழில் 4.0 எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 10,500 சதுர அடி பரப்பளவில் பணிமனை கட்டடம் ரூ.3.73 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. மேலும், திட்டத்தின் கீழ் 5 நவீன பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியினை வழங்கிட ரூ.31 கோடி செலவில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் மூலம் ஆண்டொன்றுக்கு 152 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் தொடக்க விழா கடலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.