பொள்ளாச்சி: ஆழியாறு அணை பகுதியில் அழகிய யானைக் கூட்டம் கடந்த சில நாட்களாக கண்களுக்கு விருந்தாக உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான பறவைகள், பல்வேறு வகையான மாண்கள் வாழ்ந்து வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான பறவைகள், பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வரும் பகுதியாகும்.
ஆனைமலை புலிகள் என்ற பெயருக்கு ஏற்றவாறு யானைகள் வனப்பகுதியில் அதிக அளவில் தென்படும். இந்தக் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்தையொட்டி ஆழியாறு அணை அமைந்துள்ளது.
இந்த அணை வனப்பகுதியையொட்டி உள்ளதால் கோடை காலங்களில் வன விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக வந்து செல்லும். இதில் குறிப்பாக யானைக் கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் உணவுகள் தேடியும் தண்ணீர் அருந்துவதற்காக தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகள் நீர்நிலைப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
தற்போது, கடந்த சில நாள்களாக ஆழியாறு அணையில் குரங்கு நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதி, நவமலை செல்லும் வழித்தடங்களிலும் யானைகள் கூட்டமாக தண்ணீர் அருந்த வருவது சாலைகளில் செல்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது.