சென்னை: கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, அதனை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த கல்வியாண்டில், தொடக்கத்திலேயே சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்பதால், ஆசிரியர்களும், மாணவர்களும் சற்று கவலை அடைய வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருப்பதாவது, கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்.
பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.
மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 12) முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்க முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு இம் மாதம் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இம் மாதம் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஏற்கெனவே பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் சூழலில், பள்ளிகள் திறப்பையொட்டி முன்னேற்பாடுகளை செய்ய முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
பள்ளிகளில் மாணவா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை, குப்பைத்தொட்டிகள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். பள்ளி வளாகங்களில் புதா்மண்டி கிடக்கும்பட்சத்தில் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்டவை சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.