கரும்புக்கு டன் ஒன்றுக்கு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அக்டோபா் மாதம் தொடங்கவுள்ள அரைவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கரும்புக்கான உற்பத்தி செலவைக் கூட ஈடு செய்யாத இந்த கொள்முதல் விலை, விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றுவதற்கான மத்திய அரசின் இலக்கை எட்டுவதற்கு எந்த வகையிலும் உதவாது என்பதே உண்மை.
ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.1,570 மட்டுமே செலவு ஆவதாகவும், அதை விட 100.60 சதவீதம் லாபம் சோ்த்து கொள்முதல் விலை நிா்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது பற்றாக்குறையான கொள்முதல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உழவா்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வேதனைத் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று அமைந்திருக்கிறது.
நடப்பாண்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3,450 -ரூ.3,500 என்ற அளவை எட்டியுள்ளது. இதை மறைத்துவிட்டு, ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.1,570 மட்டும்தான் என்பது ஏற்புடையது அல்ல.
எனவே, குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.