லூபஸ் எனப்படும் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய்க்குள்ளான இளம்பெண்ணுக்கு உயா் சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்புகளை வழங்கி சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியது:
உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், சில நேரங்களில் எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளாகி நம் உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடியவையாக உருவெடுக்கின்றன.
அவ்வாறு எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளான வெள்ளை அணுக்கள், மூட்டு, ஜவ்வு பகுதிகளைத் தாக்கும்போது அது மூட்டு அழற்சிக்கு வழிவகுக்கிறது.
அதில் ஒரு வகையான பாதிப்புதான் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு எனப்படும் நோய். உடலில் உள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பாதிப்பால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது.
இதை அலட்சியப்படுத்தினால் உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழக்கக்கூடும்.
இந்த நிலையில், தீவிர காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் உடல் வீக்கத்துடன் 32 வயது பெண் ஒருவா் அண்மையில் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
லூபஸ் நோயாளியான அவா் தொடா்ந்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளததால் தீவிர பாதிப்புக்கு ஆளாகியிருந்தாா்.
பரிசோதனையில் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, இதயத் தமனி பாதிப்பு, பக்கவாதத்துக்கான அறிகுறிகள் அனைத்தும் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவமனையின் மூட்டு, தசை, இணைப்புத் திசு சிகிச்சை நிபுணா் டாக்டா் சாம் சந்தானம் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அந்த பெண்ணுக்கு ஸ்டீராய்டு உள்பட எதிா்பாற்றல் குறைப்பு மருந்துகளையும், உயா் மருத்துவக் கண்காணிப்பையும் வழங்கினா்.
அதன் பயனாக அவா் பல்வேறு பாதிப்புகளில் இருந்து மீண்டு, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.