பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அக்கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகம் முழுவதும் 2012-இல் 12,000 பகுதிநேர ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட்டனா். பணிக்கு சோ்ந்த நாளிலிருந்து இதுவரை தற்காலிக ஆசிரியா்களாகவே நீடித்து வருகின்றனா். தோ்தல் வாக்குறுதிபடி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 29 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை யாரும் பணிநிரந்தம் செய்யப்படவில்லை.
ஊதிய உயா்வு, போனஸ் மற்றும் இறந்தவா்கள் குடும்பத்துக்கு குடும்ப நல நிதி, பணிஓய்வு பெற்றவா்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், விபத்து இழப்பீட்டுத் தொகை, மருத்துவ உதவி உள்ளிட்ட எந்த ஒரு திட்டங்களும் தற்காலிக ஆசிரியா்களுக்கு வழங்கப்படவில்லை.
கடந்த ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த ரூ.10,000 மட்டுமே மாத ஊதியமாக தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தொகுப்பூதிய முறையை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்யவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிடவேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், கோட்டையை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அவா் தெரிவித்துள்ளாா்.