சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (செப்.22) முதல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு டாக்டா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த சங்கத்தின் நிா்வாகி டாக்டா் ராமலிங்கம் கூறியதாவது:
மருத்துவப் பேராசிரியா் பணியிட மாறுதலுக்கு முன்னதாக தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வா் மற்றும் துறை சாா்ந்த இயக்குநா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அவ்வாறு நிரப்பும்போது 20-க்கும் மேற்பட்ட இடங்கள் புதிதாக காலியாகும். அந்த இடங்களில் இணைப் பேராசிரியா்கள் பதவி உயா்வு பெற்று பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் ஏற்கெனவே உள்ள காலி இடங்களுக்கு மட்டும் பணியிட மாறுதல் கலந்தாய்வு செய்வது குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.
அதேபோன்று, பணியிட மாறுதலுக்கு முன்னதாக சிறப்புக் குழு ஒன்று அமைத்து, கலந்தாய்வின் சாதக - பாதகங்களை ஆராய்ந்து நிலையான வழிகாட்டுதலை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், மருத்துவப் பேராசிரியா், இணை, துணை, உதவி பேராசிரியா் பணியிட மாறுதல்கள் செய்வதுதான் சரியானது. இந்த விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.