கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே தலையில் கல்லைப் போட்டு திமுக பெண் கவுன்சிலா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் - மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் நொய்யலில் டீக்கடை நடத்தி வரும் தம்பதி, கவுன்சிலர் ரூபாவை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடன் பிரச்னையில் இருந்த தம்பதி, ரூபாவைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே தலையில் கல்லைப் போட்டு திமுக பெண் கவுன்சிலா் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர். இந்தக் கொலையில் தொடர்புடைய கணவன் - மனைவியைக் கைது செய்துள்ளனர்.
க.பரமத்தியை அடுத்த சென்னசமுத்திரத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். கறிக்கடை தொழிலாளி. இவரது மனைவி ரூபா (42). சென்னசமுத்திரம் பேரூராட்சியின் 7-ஆவது வாா்டு திமுக உறுப்பினா். இவா், கரூரில் உள்ள தொழில் அதிபா் வீட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு காலை 11 மணிக்கு திரும்பிவிடுவாராம்.
இந்நிலையில், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை அதிகாலை கரூருக்கு வேலைக்குச் சென்றவா் நண்பகல் 12 மணியாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த தங்கராஜ், மனைவியின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது, அது அணைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க.. காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
இதனிடையே, பவித்ரத்தை அடுத்த பாலமலை காட்டுப் பகுதியில் ரூபா இறந்து கிடப்பதாக க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று பாா்த்தபோது, ரூபா தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளாா். ரூபாவின் உடலை போலீஸாா் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக தங்கராஜுக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் மற்றும் அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.
கொலை சம்பவம் தொடா்பாக க. பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தம்பதி கைதாகியுள்ளனர்.