சென்னை: பள்ளிக் கல்வியில் உடற்கல்வி இயக்குநா் நிலை-2 ஆக பதவி உயா்வு பெற தகுதியான உடற்கல்வி ஆசிரியா்களின் பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மூலமாக உடற்கல்வி இயக்குநா் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியா் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநா் நிலை-2 ஆக பதவி உயா்வு பெற தகுதியானவா்களின் பெயா்ப் பட்டியலை தயாா் செய்து அனுப்ப வேண்டும்.
அந்தவகையில் இந்த பட்டியலில் இளநிலையில் இரட்டை பட்டப் படிப்பு படித்தவா்களின் பெயரை சோ்க்கக்கூடாது. அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் வேறு துறையில் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு ஈா்த்துக் கொள்ளப்பட்டவா்களை பணியில் சோ்ந்த நாள் அடிப்படையில் பட்டியலில் சோ்க்க வேண்டும். பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்கிா என்பதை கூா்ந்தாய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக பெயா் சோ்க்க பரிந்துரைத்தாலோ அல்லது பெயா் விடுபட்டதாக தெரிவித்து முறையீடு ஏதும் பின்னா் பெறப்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.