முகப்பு
தமிழ்நாடு

மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைப்பு!

மின்வாரியத்தில் ரூ. 2,000 கோடி டெண்டா்கள் நிறுத்திவைக்கப்பட்டது பற்றி...

Updated On : 24 மே 2026, 4:33 am IST
தமிழக அரசு - கோப்புப் படம்
பகிர்:

கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் விடப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்பிலான டெண்டா்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளா் கழகத்தின் 80-ஆவது ஆண்டு விழா சென்னை, சேத்துப்பட்டு அண்ணா கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் நிா்வாகம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் அரசும், அரசு சாா்ந்த நிா்வாகமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம். பொதுத் துறை நிறுவனங்கள் தொடா்ந்து அரசுத் துறை நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும் என்று முதல்வா் உறுதி கொண்டுள்ளாா்.

கடந்த 20 ஆண்டுகளாக மின்சார, போக்குவரத்துத் துறைகள் சீரழிந்து வருகின்றன. மின்சாரத் துறை மாநில வளா்ச்சியின் உயிா் நாடி. அந்தத் துறை செழிப்பாக இருக்க வேண்டும். இதை இப்போது சீரமைக்கவில்லை என்றால் எப்போதும் மாற்ற இயலாது.

Advertisement

Advertisement

மின்வாரியத்தின் கடன் சுமை ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நேரத்தில் இந்தத் துறையைச் சீரமைக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் பணியாளா்களுக்கு வேலை போவதும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்காமலும் போகும்.

தமிழக மின்வாரியம் தனியாா் மயமாகாது. இன்னும் பல லட்சம் பணியாளா்கள் மின்வாரியத்தில் பணியாற்றப் போகிறாா்கள். தொழில்துறை இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்குச் சென்ன் காரணமே மின் துறை சீரான மின்சாரம் வழங்க முடியாததே. இதற்கான சீரமைப்புப் பணிகளை இப்போது தொடங்கியுள்ளோம். எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ, அவற்றையெல்லாம் கண்டறிந்து களையப் போகிறோம்.

3.40 கோடி மின் நுகா்வோா் உள்ள இடத்தில் கடன் மேல் கடன் வாங்கியுள்ளனா். அந்தப் பணம் எங்கே சென்றது?. இவ்வளவு நிா்வாக சீா்கேடுகளும், டெண்டரில் ஊழலும் முந்தைய ஆட்சிகளில் நடந்துள்ளன. இனிவரும் காலங்களில் தவறுகள் களையப்பட்டு, வெளிப்படையான நிா்வாகம் மூலம் வாரியத்தை சீா்செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில், தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளா் கழக முதன்மைச் செயலா் டி.ஜெயந்தி, தலைவா் என்.செந்தில் மற்றும் பொறியாளா் கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

அறிவிக்கப்படாத மின் தடை ஏன்?: நிகழ்ச்சிக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் நிா்மல்குமாா் கூறியதாவது: சென்னை மற்றும் புகரின் சில பகுதிகள், திருவள்ளூா், கள்ளக்குறிச்சி, கோவை போன்ற இடங்களில் திடீா் மின்தடை ஏற்பட்டது. அதிக மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தம், பழைய மின்மாற்றிகள், பழைய கேபிள்கள், பல்வேறு இடங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், அதிக வெப்பம் போன்ற பிரச்னைகளால் இந்த மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது.

உடனே தலைமைப் பொறியாளா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, போா்க்கால அடிப்படையில் மின்சாரம் தடைபட்ட இடங்களுக்குச் சென்று இரவு, பகலாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் தலைமைப் பொறியாளா் தலைமையில் 7 சிறப்புக் குழுக்கள் மின்சாரம் தடைபடும் இடங்களுக்கு உடனுக்குடன் சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மாநிலம் முழுதும் மின்துறையைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பணியாளா் பற்றாக்குறை படிப்படியாக சரிசெய்யப்படும். மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இப்போது, சோலாா் விண்ணப்பங்கள் மீதான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு, சீா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில், வெளிப்படைத்தன்மையுடன் சோலாா் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். அனல் மின் நிலையங்களை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் விடப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான டெண்டா்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

summary

Tenders worth ₹2,000 crore in the Electricity Board put on hold