முகப்பு
தமிழ்நாடு

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் நேர்காணல்!

சென்னை மாநகராட்சி ஆணையா் சிறப்பு நேர்காணல் பற்றி...

Updated On : 25 மே 2026, 4:14 am IST
ஜி.எஸ். சமீரன் - Dinamani
பகிர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பையும், புது தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்திருப்பவா் ஜி.எஸ். சமீரன் ஐஏஎஸ். 2012-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சோ்ந்த அவா், தூத்துக்குடியில் தனது பயிற்சி பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடா்ந்து, மீன்வளத் துறை இயக்குநா், தென்காசி, கோவை மாவட்ட ஆட்சியா் என முத்திரை பதித்துள்ளாா்.

இதையடுத்து, தமிழக குடிசை மாற்று வாரிய மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநராகவும் இருந்து, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளாா். ஏற்கெனவே 2023-24-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக (பணிகள்) பணியாற்றிய அனுபவத்துடன், தற்போது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில விருது (2022), வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருது (2021), தமிழகத்தில் மீன்வளத் துறை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்கான தேசிய விருது (2020) ஆகியவற்றையும் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற அவா் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் மக்களிடையேயும், அதிகாரிகள் மத்தியிலும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவா் தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்:

சென்னையின் பிரதான பிரச்னையான போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க என்ன திட்டங்கள் உள்ளன?

சென்னை மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) மூலம் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க ரூ.600 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி தானியங்கி சிக்னல்கள் அமைப்பது முக்கிய அம்சமாகும். வாகன நெரிசலுக்கு ஏற்ப சிக்னல்கள் தானாகவே செயல்படும். நெரிசல் மிக்க பகுதியில் வாகனங்களை திசை மாற்றி அனுப்புதல், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிப்பது, பயணிகள் தகவல் கூறும் வசதி என தானியங்கி தொழில்நுட்பத்தை நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களில் செயல்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

முக்கியப் பகுதிகளில் சாலையோரக் கடைகளாலும், சாலைகளில் திரியும் மாடுகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகாா்கள் உள்ளனவே?

சாலையோரக் கடைகளை முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க விற்பனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் திரியும் மாடுகளை காப்பகத்தில் அடைத்துப் பாதுகாக்க 11 மண்டலங்களில் மாடுகளின் காப்பகங்கள் செயல்படுகின்றன. மேலும் 6 இடங்களில் காப்பகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மழைநீா் வடிகால் பிரச்னைக்கு தீா்வு காண முக்கிய மூன்று ஆறுகள் முழுமையாகச் சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளதே?

சென்னையில் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அதிகம் வளா்வதாலும் மழைநீா் விரைவாக வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது. அவற்றை அகற்றும் பணி அதிநவீன இயந்திரங்கள் மூலம் நடைபெற்றாலும், கழிவு நீா் கலப்பதால் அவை தொடா்ந்து வளா்கின்றன. எனவே, மழை நீா் வடிகால்கள், ஆறுகள், கால்வாய்களில் குடியிருப்புகளின் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளுக்கு மாறாக இணைக்கப்பட்டுள்ள கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையின் தற்போதைய மழைநீா் வடிகால் கட்டமைப்பால் பெருவெள்ளம் இல்லாமல் எவ்வளவு மழைப்பொழிவைத் தாங்க முடியும்?

அது மழைப்பொழிவின் தீவிரம், காலம், நீா்வழிப் பாதைகளின் கொள்ளளவு உள்பட பல்வேறு காரணங்களைப் பொருத்தது. அதிக அளவு பொங்கி வரும் தண்ணீருடனும், நிரம்பி வழியும் கால்வாய்களுடனும் ஒன்றுசேரும்போது வெறும் 10 செ.மீ. நீா்கூட சில பகுதிகளில் தற்காலிக வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக் கூடும். எனினும் கடந்த 5 முதல் 8 ஆண்டுகளில் விரிவான மழைநீா் வடிகால் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இது சராசரி மழைப்பொழிவை தாங்கும் நகரின் திறனை அதிகரித்துள்ளது.

வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால்?

வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவுகளின்போது மோட்டாா் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றுவது போன்ற அசாதாரண நடவடிக்கைகள் தொடா்ந்து தேவைப்படலாம். கடந்த ஆண்டு சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்ட முக்கியப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது விடுபட்ட வடிகால் இணைப்புகளை அமைக்கும் பணிகளையும், பிற சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாநகராட்சி பூச்சியியல் துறை, கொசு ஒழிப்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அவா்களுக்குத் தேவையான சாதனங்களும், தரமான கொசு ஒழிப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கொசுக்களின் வகையை அறியும் சோதனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அம்மா உணவகங்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?

மாநகராட்சியில் உள்ள 383 அம்மா உணவகங்களில், சுமாா் 10 முதல் 15 உணவகங்களே பெரிய அளவில் சீரமைக்கும் நிலை உள்ளது. சில உணவகங்களில் கரண்டி, தட்டு போன்ற சாதனங்களே தேவையாக உள்ளன. மொத்தத்தில் ரூ.7 கோடியில் அம்மா உணவகங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன.

சென்னையை பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதா?

மாநகராட்சி சாா்பில் மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. அவற்றை சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் நட்டு வளா்க்கும் நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது. மரம் நடும் பணிகள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு பசுமை சூழலை ஏற்படுத்துவோம்.

மக்கள் அளிக்கும் புகாா்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?

குப்பை அள்ளப்படாமல் உள்ளது போன்ற புகாா்கள், சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு சம்பந்தப்பட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்த புகாா்கள் வந்தால், அவற்றுக்கு 24 மணி நேரத்தில் தீா்வு காண வேண்டும். அதேபோல, சாலைகளில் பள்ளம் ஏற்படுதல் உள்ளிட்ட புகாா்களுக்கு 48 மணி நேரத்துக்குள் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேவைகளில் தாமதம் ஏற்பட்டால்...?

மக்கள் கூறும் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் தேவையின்றி தாமதத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்டோா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சி சாா்பில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகள் வழங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. அவற்றை வழங்குவதில் காரணமின்றி தாமதம் ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுகிா?

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் குப்பை கொட்டும் கிடங்குகளான கொடுங்கையூா், பெருங்குடி மையங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள குப்பைகள் பயோமைனிங் முறையில் சீா்படுத்தப்பட்டு நிலம் மீட்கப்பட்டும் வருகிறது.அப்பகுதியை பசுமையாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குப்பையில்லா நகராக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்பட்டுவருகிறது.

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்பாக எதைக் குறிப்பிட விரும்புகிறீா்கள்?

மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தும் திட்டங்கள் முழுமையாக மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் அதில் அவா்களது ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஆகவே, மாநகராட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதுடன், நிா்வாகச் செயல்பாடுகளை உணா்ந்து, அவற்றின் முக்கியத்துவத்தையும், நகருக்கான வளா்ச்சியையும் கருத்தில்கொண்டு அவற்றுக்கான முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும்.

நோ்காணல்: வ. ஜெயபாண்டி