தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை...
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (மே 25) முதல் மே 30 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, நாமக்கல், கரூா், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, கோவை, திருப்பூா் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 26) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இந்த இரு நாள்களிலும், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: திங்கள்கிழமை (மே 25) முதல் 27-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் மே 28 வரை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று திங்கள்கிழமை மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், தெற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகா் சாத்தூரில் 60 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை), வட்டமலை நீா்த்தேக்கம் (திருப்பூா்), மதுரை- தலா 30 மி.மீ., அவினாசி (திருப்பூா்)- 20 மி.மீ., வாலாஜா (ராணிப்பேட்டை), ஆண்டிபட்டி, மேட்டுப்பட்டி, குப்பணம்பட்டி (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சிவகாசி (விருதுநகா்), சேது பாஸ்கரா அக்ரி கல்லூரி (சிவகங்கை), எமரால்டு (நீலகிரி)- தலா 10 மி.மீ. மழை பதிவானது.
வெப்ப அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மீனம்பாக்கம்-105.98, திருத்தணி-105.08, திருச்சி, மதுரை விமான நிலையம்-தலா 102.02, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை நகரம், நாகை-தலா 101.84, கடலூா்-100.76, காரைக்கால்-100.94, பாளையங்கோட்டை-100.22, பரமத்தி வேலூா், பரங்கிபேட்டை, தஞ்சாவூா்-தலா 100.4 மி.மீ. பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.