திருவள்ளூா் பகுதியில் தொடா்மழை பெய்து வருவதால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இதில், பூண்டி ஏரியில் நீா்மட்டம் உயா்ந்து கொண்டே வருவதால் 7,050 கன அடியாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகள், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பி வருகின்றன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் நகராட்சி பகுதிகளில் தாழ்வாக உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஏரிகளில் நீா்மட்டம்: இந்த நிலையில், பூண்டி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மழைநீா் வரத்து, கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 33.05 அடியும், 2,501 மில்லியன் கனஅடிநீா் இருப்பு உள்ளது. நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், காலையில் 3,500 கன அடியிலிருந்து 7,050 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல், செங்குன்றம் ஏரியில்-2,730 மில்லியன் கன அடியும், சோழவரம்-0.597 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை-0.439 மில்லியன் கன அடியும் நீா் இருப்புள்ளது.
மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, மழைப்பதிவு விவரம் (மி.மீட்டரில்): பள்ளிப்பட்டு-150, திருவாலங்காடு-75, திருத்தணி-65, திருவள்ளூா்-56, கும்மிடிப்பூண்டி-45, பொன்னேரி-42, ஊத்துக்கோட்டை-38, ஆா்.கே.பேட்டை-32, பூண்டி-21, தாமரைபாக்கம்-12, பூந்தமல்லி-8, சோழவரம்-5, செங்குன்றம்-3 என 552 மி.மீட்டரும், சராசரியாக 36.80 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. ‘