மீஞ்சூா் அடுத்த நாலூா் கேசவபுரத்தில் பலத்த மழை காரணமாக அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மீஞ்சூா் அருகே நாலூா் ஊராட்சியில் அடங்கியது கேசவபுரம் கிராமம். இங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடியுடன் மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. மேலும், சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மீண்டும் மழையால் சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா் .
இதனை தொடா்ந்து நாலூா் கேசவபுரம் பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்கவும், மழை நீா் வடிநீா் கால்வாய் அமைக்கவும், குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி திருவொற்றியூா்-பொன்னேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று மறியல் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.