செல்வம் மல்கு திருமங்கலக்குடி
செல்வம் மல்கு சிவநியமத்தராய்ச்
செல்வம் மல்கு செழு மறையோர் தொழச்
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே
விளக்கம்
செல்வம் (முதல் அடி) = பலவகையான செல்வங்கள். செல்வம் (இரண்டாவது அடி) = அருட்செல்வம். செல்வம் (மூன்றாவது அடி) = நிலவளம் மற்றும் நீர் வளம். செல்வன் = வீடு பேறு ஆகிய நிலையான செல்வத்தை உடைய பெருமான்.
இந்த பாடலில் செல்வம் என்ற சொல் பல முறை பயன்படுத்தியுள்ள நயம், நமக்கு ஞான சம்பந்தரின் பாடல் ஒன்றினை (1.80.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடல் தில்லைப் பதியின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலாகும். சேண் ஓங்கி = ஆகாயம் வரை உயர்ந்து விளங்கும். செல்வ மதி = அழகிய சந்திரன். செல்வ வளம் மிக்க மாட வீடுகள் வானளாவ உயர்ந்து நின்று, அழகிய சந்திரனைத் தொடும் அளவுக்கு காணப்படுவதும், நாளுக்கு நாள் செல்வவளம் கொழித்து வளர்வதும், ஞானச் செல்வத்தை மிகுதியாக உடைய செல்வர்கள் வாழ்வதும் ஆகிய தில்லை நகரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் உறைபவனும், வேறு எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை உடையவனும் ஆகிய சிவபெருமானை வணங்கி, அதனால் நாம் அடையும் அருட்செல்வமே, அனைத்துச் செல்வங்களிலும் மிகவும் உயர்ந்த செல்வமாகும் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
பொழிப்புரை
பலவகையான செல்வங்கள் மலிந்த திருமங்கலக்குடியில், சிவ ஒழுக்கம் நிறைந்து வாழ்தலால் அருட்செல்வத்தை உடைய செல்வர்கள் வாழ்கின்றார்கள். நீர் வளமும் நில வளமும் நிறைந்து காணப்படும் இந்த தலத்தில் உள்ள திருக்கோயிலில், தனது தேவியோடும் உறைகின்ற பெருமான், நிலையானதும் பேரின்பம் அளிக்கக் கூடியதும் ஆகிய வீடுபேறு செல்வத்தினை உடையவனாவான். அவனது திருப்பதங்களைத் தொழுது அந்த செல்வம் பெற்று இன்பம் அடைவீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.