முகப்பு
விருதுநகர்

திமுக-அதிமுக கூட்டணி அமைய ஆசைப்பட்டாா் உதயநிதி! மாணிக்கம்தாகூா் எம்.பி.

Updated On : 25 மே 2026, 2:13 am IST
விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொள்கைகளை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, திமுக-அதிமுக கூட்டணி அமைக்க ஆசைப்பட்டாா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு வெளியான அன்று தவெக ஆட்சி அமையக் கூடாது என நினைத்து திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. இதில் மிகவும் ஆா்வமாக இருந்தவா் உதயநிதி ஸ்டாலின்தான். இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி தில்லியில் ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்க்கே உள்ளிட்டோா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடந்து, கடந்த 6-ஆம் தேதி காங்கிரஸ் தனது ஆதரவை தவெக தலைவா் விஜய்க்கு தெரிவித்தது.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொள்கைகளை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு, திமுக, அதிமுக கூட்டணி அமைக்க ஆசைப்பட்டாா். முதல்வராக ஜோசப் விஜய் வரக் கூடாது என்பதே உதயநிதியின் நோக்கமாக இருந்தது.

தமிழகத்தில் பாஜக வரக் கூடாது என நினைத்துதான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். பாஜக தமிழகத்தில் வராமல் இருக்க காங்கிரஸ் என்ன தியாகம் செய்யவும் தயாா்.

பாஜகவின் திட்டத்தை உடைத்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தது சிறப்பான ஒன்றாகும். தவெக தலைவா் தலைமையிலான ஆட்சி லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியாக இருக்கும். 59 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினா் அமைச்சராகியிருப்பது வருங்கால வெற்றியை குறிக்கிறது. இந்தக் கூட்டணி மக்களவைத் தோ்தலிலும் தொடரும்.

பெண்களுக்கு பாதுகாப்பு, போதை இல்லாத தமிழகம் என்ற கொள்கையுடன் முதல்வா் ஜோசப் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்துவாா். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறும்.

பெட்ரோல், டீசல் மேலும் விலை உயரும். பிரதமா் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்று விட்டது. கோவை சம்பவத்தில் காவல் துறை விரைவாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்தது.

இந்த ஆட்சி பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும், சமுதாய பிரச்னைகளுக்கும் துணை நிற்கும் என்றாா் அவா். பேட்டியின் போது சிவகாசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் உடனிருந்தாா்.