• "மனசெல்லாம்' படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் வித்யாபாலன். ஆனால் அவருக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் இடம் கிடைத்தது. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த வித்யாபாலன், அஜித் ஜோடியாக "நேர் கொண்ட பார்வை' படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடக்க காலத்தில் இவரது நடிப்பு பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கைப் படமான "தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து திரையுலகினரின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார். ஆனால் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தயாராக இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யத் தொடங்கினார். அதற்கு ஒருபுறம் வரவேற்பும் மற்றொருபுறம் விமர்சனங்களும் வந்தன.
விமர்னங்களுக்கு பதிலடி தந்துள்ளார் வித்யாபாலன். அதில் அவர் "என்னை பிடிக்காதவர்கள் என் படத்தைப் பார்க்காதீர்கள். "டர்ட்டி பிக்சர்' மற்றும் "கஹானி' படங்களில் நடித்த பிறகு படங்களை எப்படித் தேர்வு செய்து நடிப்பது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எனக்குள்ள துணிச்சலால் நான் எல்லா மொழிப் படங்களிலும் நடிக்கிறேன். சிலர் நான் தேர்வு செய்வதை விரும்புவார்கள், சிலர் விரும்பமாட்டார்கள். யாருக்கெல்லாம் விருப்பமில்லையோ அவர்கள் என் படத்தை பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
• "மைனா', "சாட்டை', "மொசக்குட்டி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் அடுத்து தயாரித்து வரும் படம் "சம்பவம்'. ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
பூர்ணா, சிருஷ்டி டாங்கே இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். "பக்ரீத்' படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, "நான் கடவுள்' ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையுடன் வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் எழுதி இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார். முத்து கே.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் நடந்தது.
• "டிமான்டி காலனி', "இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான புது அறிவிப்பு வெளிவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியைப் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். "விக்ரம் 58' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் இர்பான் பத்தான் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்க உள்ளார் .
2006- ஆம் ஆண்டு லாகூரில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் இர்பான். தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது.
• நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா பாணியில் தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களைத் தேர்வு செய்கிறார் தமன்னா. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தற்போது வந்துள்ள "பெட்ரோமாக்ஸ்' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்தார் தமன்னா.
அப்போது பேசும் போது... "தேவி, தேவி 2 ஆகிய படங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள பேய் கதை இது. வழக்கமாக மற்ற படங்களில் பேயைக் கண்டு மனிதர்கள் பயப்படுவார்கள். இதில் அதுவும் இருக்கும். அதை விட, மனிதர்களைப் பார்த்து பேய்கள் பயப்படுவதையும் காட்டியிருக்கிறார்கள்.
சமீபகாலமாக ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறேன். "பெட்ரோமாக்ஸ்' படம், என் சினிமாப் பயணத்தில் அடுத்த கட்டமாக இருக்கும். அடுத்து விஷாலுடன் ஆக்ஷன், ஹிந்தி "குயின்' படம் தெலுங்கில் "தட் இஸ் மகாலட்சுமி' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகின்றன. அதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை கிடையாது. சிலர் வேண்டுமென்றே கற்பனையாக எழுதுகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
• சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்புதான் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. அது போல் சைதன்யாவும் அதிக படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் சைதன்யா ரசிகர்கள் சமந்தா குறித்து விமர்சித்து இருக்கின்றனர். நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது நாயின் கழுத்தில், "நெம்பர் 1 ஹஸ்பண்ட்' என்று எழுதிய பேட்ச் உள்ள படம். இதைப் பார்த்த சைதன்யா ரசிகர்கள் கோபம் அடைந்தனர். "பொது வெளியில் கணவரைப் பற்றி மரியாதையாகப் பேச கற்றுக் கொள்ளுங்கள்' என்று அறிவுரை தந்திருக்கின்றனர் சமந்தா தன்னைப்பற்றி கமென்ட் அடிக்கும்போதெல்லாம் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு நகர்ந்து செல்கிறார் கணவர் நாக சைதன்யா. ஆனால் சமந்தாவின் கமென்ட்டை சைதன்யா ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டு சமந்தாவிடம் மல்லுகட்டத் தொடங்கி உள்ளனர்.
ஜி.அசோக்