தினமணி கதிர்

வித்தியாசமான நடத்துநர்!

தினமணி

பயணிகளிடம் பணிவாகப் பேசும் பேருந்து நடத்துநர்களைக் காண்பது அரிது. பணிவு கலந்த நயமான சொற்களால் பயணிகளை வரவேற்பதில் தொடங்கி, அவர்களைப் பத்திரமாக இறக்கி விடுவது வரை, அனுசரணையாக உபசரிக்கும் கோவை போக்குவரத்துக் கழக நடத்துர் ஒருவரின் அணுகுமுறை பயணிகளைக் கவர்ந்துள்ளது.
 கோவை, பேரூர் - கோவைப்புதூர் சாலையில் உள்ள ராமசெட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பனின் மகன் கா.சிவசண்முகம். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள அவர், குடும்ப பாரத்தைச் சுமக்க 1985 -ஆம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் நடத்துநராக வேலைக்குச் சேர்ந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1995 -இல் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் சேர்ந்தார்.
 2015 -ஆம் ஆண்டு வரை நகர்ப்புற பேருந்துகளில் பணியாற்றினார். 2016 -ஆம் ஆண்டு முதல் கோவை -மதுரை வழித்தடத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார்.
 கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்குப் பேருந்து புறப்படும் முன்பாக பயணிகளைக் கைகூப்பி வணங்கி வரவேற்கிறார். அதைத் தொடர்ந்து "உங்களின் இனிமையான பயணத்துக்காக அரசுப் பேருந்தை தேர்ந்தெடுத்தமைக்கும், உங்களுக்குப் பணி புரிய வாய்ப்பளித்தமைக்கும் நன்றி. தங்களின் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள்'' என பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அளிக்கிறார்.
 "பேருந்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழையுங்கள்', "சரியான சில்லறை கொடுத்து உதவுங்கள்' என பயணிகளிடம் தூய தமிழில் வேண்டுகோள் விடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள், பெண்கள், கர்ப்பிணிகளுக்கான இருக்கைகளை ஒதுக்கீடு செய்து அமர வைக்க முன்னுரிமை அளிக்கிறார்.
 பயணத்தில் யாருக்கேனும் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டால் தன்னிடம் உள்ள புளிப்பு மிட்டாய், மாத்திரைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி பயணிகளை நெகிழ வைக்கிறார்.
 பேருந்து நகரத் தொடங்கியவுடன், தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்ட கட்டண விவரங்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒலிபெருக்கியில் ஒலிபரப்புகிறார்.
 அதோடு இல்லாமல், ஒவ்வோர் ஊர் வரும் போதும் அந்த ஊரின் பெயரைக் குறிப்பிட்டு இறங்க வேண்டிய பயணிகளை அவர்களின் உடைமைகளை மறவாமல் சோதித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறி மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழியனுப்பி வைக்கிறார்.
 இப்படியான, இவரது நடவடிக்கைகளால் ஈர்க்கப்படும் பயணிகள் அவரைப் பாராட்டி விடை பெறுகின்றனர். கடும் சொற்களால் காயப்படுத்தும் நடத்துநர்களைப் பார்த்து பழகி விட்ட நமக்கு, இவரின் அணுகுமுறையைப் பார்த்துச் சிலிர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
 அவரிடம் பேசியதிலிருந்து...
 " "அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், புத்தாக்க வகுப்புகள் அடிக்கடி நடைபெறும். அதில், அரசுப் பேருந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பயணிகளிடம் அணுகும் முறை, பேருந்துப் பராமரிப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிப்பார்கள்.
 ஒரு முறை கோவையில் நடைபெற்ற புத்தாக்க வகுப்பில் பேசிய பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியைச் சேர்ந்த நடத்துநர் ஞானசேகரன், தான் பணிபுரியும் பேருந்தில் பயணிகளுக்கு தினமொரு திருக்குறள் கூறி அதற்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட மற்ற போக்குவரத்து ஊழியர்கள் அவரைப் பாராட்டினர்.
 பயணிகளுக்கு உதவும் வகையில் நாமும் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் பேசியது விதைத்தது. நடத்துநர் ஞானசேகரனை முன்மாதிரியாகக் கொண்டு, பயணிகளை வரவேற்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தினேன். இதற்காக எனது சொந்தச் செலவில் மைக், ஒலி அமைப்புகளைப் பேருந்தில் பொருத்தினேன். ஆரம்பத்தில் பயணிகள் முன்பு நின்று பேச கூச்சமாக இருந்தது. பயணிகளின் ஆதரவால், நாளடைவில் இயல்பாகப் பேசத் தொடங்கிவிட்டேன். என் வரவேற்புரையைக் கேட்கும் சிலர், ஆர்வமிகுதியால் கைதட்டி ஆரவாரம் செய்வது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
 தற்போது, என்னுடன் பலர் செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் பெருமைப்படுத்துகின்றனர். பயணங்களில் அறிமுகமாகி இன்று நண்பர்களாக மாறியவர்களும் அதிகம். அவர்கள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். நாம் மற்றவர்களுக்கு நேர்மையோடு கொடுக்கும் அன்பும், மரியாதையும் பல மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.
 இதுவரை 100-க்கும் அதிகமான இலவச கண் சிகிச்சை முகாம், ரத்த தான முகாம்கள் நடத்தி உள்ளேன். என் சமூக அக்கறையை கெளரவிக்கும் விதமாக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நான் ஓய்வு பெறும் வரை என் சேவையில் குறைகளின்றி ஈடுபட வேண்டும், நல்ல மனிதர்களின் அன்பைப் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு எனது பயணங்களைத் தொடர்கிறேன்'' என்றார்.
 -வெ.செல்வகுமார்
 படங்கள் : உ.ச.சாய் வெங்கடேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT