தினமணி கதிர்

திரைக் கதிர்

DIN

* விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் "இன்று நேற்று நாளை'. இப்படத்தை ரவிக்குமார் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்துக்கு விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்துக்கு "அயலான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சயின்ஸ்ஃபிக்ஷன் கதை கொண்ட இதில் ஏலியன் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது. ஏலியனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதை விண்வெளி கிரகவாசிகள் பற்றி எழுதப்பட்டது என்றாலும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்காது. வேறு சில முக்கிய பிரச்னைகளும் இடம் பெறுகின்றன' என்று படக்குழு தெரிவித்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீதி சிங் நடிக்கிறார்.

* சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு நடித்து வரும் படம் "சூரரைப் போற்று'. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், வரும் மே மாத வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் விவேக் எழுதிய "வெய்யோன்சில்லி' என்ற பாடல், சென்னையில் நடுவானில் பறந்த விமானத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை விமானத்தில் பறந்தவாறு பாடல் வெளியிடப்பட்டது இல்லை. விழாவில் சூர்யா பேசும் போது....
"விமானத்துறையில் சாதனை படைத்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையில் நடிப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இதில் இடம்பெறும் 30 நிமிடக் காட்சிகள் விமானத்தில் படமாக்கப்பட்டன. எனவே, முதல்முறையாக விமானத்தில் பயணிக்கும் 70 அரசு பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்தேன். கடல் மீது விமானம் பறந்தபோது ஒரு பாடலை வெளியிட்டோம். இது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.

* காதல், நடனம், காமெடி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார் பிரபுதேவா. அவர் இயக்கிய "போக்கிரி', "தபாங்' படங்கள் ஆக்ஷன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அடுத்து நடிக்கும் படம் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் "பஹிரா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். "த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
அதில் பிரபுதேவா மொட்டை அடித்து சன் கிளாஸ் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். ஆங்கிலத்தில் வெளியான "ஜங்கிள் புக்' படத்தில் இடம் பெறும் பஹிரா என்ற கதாபாத்திரத்தின் குணாம்சம் கொண்டதுபோன்ற கதாபாத்திரத்தை இப்படத்தில் பிரபுதேவா ஏற்றிருக்கிறாராம். இன்னும் சொல்லப்போனால் சைக்கோ போன்ற கதாபாத்திரம் என்கிறார்கள்.

* சில நடிகைகளுக்குள் நடிப்பில் போட்டியிருக்கிறதோ இல்லையோ கவர்ச்சி காட்டுவதில் போட்டி அதிகமாக உள்ளது. படங்களில் மட்டுமல்லாமல் தங்களது இணைய தளப் பக்கங்களிலும் இந்த போட்டியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.அந்த வரிசையில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "மான் கராத்தே', "சகல கலா வல்லவன்' போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. தற்போது "இருட்டறையில் முரட்டு குத்து" 2-ஆம் பாகமாக உருவாகும் படத்தில் நடிக்கிறார். இதுதவிர வீடியோக்களையும் தனது இணைய தளப் பக்கத்தில் ஷாலு பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் காதலர் தினத்தில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து அளிக்க முடிவு செய்தார். கிலோ கணக்கில் ரோஜாப் பூக்களை வாங்கி தரையில் கொட்டிய ஷாலு அதன் மீது அமர்ந்து போஸ் அளித்தார். அப்படத்தை இணைய தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் சரமாரி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

* தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி இடம் வகிப்பவர் ராஷ்மிகா. விஜயதேவரகொண்டாவுடன் அவர் நடித்த "டியர் காம்ரேட்' படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில் அவரது நடிப்புக்குப் பரவலான பாராட்டுகள் கிடைத்த போதும், பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருமான வரி நோட்டீஸ் அனுப்பினார்கள். தற்போது மற்றொரு தர்மசங்கட சூழலில் ராஷ்மிகா சிக்கினார். "பீஷ்மா' என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நிதின் உடன் நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தின் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் நிதினிடம், "உங்கள் காதல் அனுபவத்தைப் பகிருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நிதின் தனது காதலியின் பெயர், அவரை மணக்க உள்ள தகவல் வரை தெரிவித்து கைத்தட்டல் பெற்றார். ராஷ்மிகாவிடம், "உங்கள் காதல் அனுபவத்தை பகிருங்கள்'' என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். ஏற்கெனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டார். ராஷ்மிகாவின் காதல் தோல்வியில் முடிந்தது. இதை பொது மேடையில் பகிர்ந்துகொள்ள விரும்பாத ராஷ்மிகா, தொகுப்பாளரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.
ஜி.அசோக் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா் விவரத்தை திருத்த நாளை கடைசி

SCROLL FOR NEXT