தினமணி கதிர்

விமானம் மூலம் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள்!

DIN

சுற்றுலா என்றாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். விமானம் மற்றும் ரயில் பயணங்கள் ரசிக்கப்படுபவை. விமானப்பயணம் ஏழை மாணவர்களுக்கோ எட்டாக்கனி.
 எழை , ஆதரவற்ற மாணவ, மாணவியர்களை விமானம் மூலம் இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் சிவகாசி சி.எம்.எஸ்.நடுநிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளிநிர்வாகத்தினர். இங்கு முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் 432 மாணவ, மாணவிகள் அனைவரும் , பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத்தொழிலகங்களில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளே.
 இப்பள்ளியைச் சேர்ந்த 34 மாணவ மாணவிகளும், 12 ஆசிரியர்களும் பிப்ரவரி 5 -ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குச் சென்றுவிட்டு, 6-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, 7 -ஆம் தேதி அதிகாலை சிவகாசி வந்தடைந்துள்ளனர். இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.ஐசக் சாம்ராஜ் நம்மிடம் பகிர்ந்து கொ ண்டதாவது:
 "சிவகாசியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை, ஒரு தொண்டு நிறுவனத்தார், விமானம் மூலம் சென்னைக்குச் சுற்றுலா அழைத்து சென்றதாகக் கேள்விப்பட்டேன். இதையடுத்து நம் பள்ளி பிள்ளைகளையும் இதுபோல விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்து சென்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இதைப் பற்றி பள்ளித் தாளாளர் டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்தோம். அனைவரும் இது சிறப்பான திட்டம் என்று கூறியதோடு நிதியுதவியும் அளித்தனர். முகநூலிலும் இதைப் பற்றி பதிவிட்டோம். முகநூல் நண்பர்களும் நிதி உதவி அளித்தனர். பின்னர் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்கள், மற்றும் ஆதரவற்ற மாணவ மாணவிகள் என 34 மாணவ மாணவிகளைப் பயணத்திற்குத் தேர்வு செய்தோம்.
 பிப்ரவரி 5 -ஆம் தேதி காலையில் சிவகாசி பள்ளியிலிருந்து, மதுரைக்கு இரு வேன்கள் மூலம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குச் சென்றோம். சென்னையில் அன்றைய தினம் பிர்லா கோளரங்கு, மெரினாகடற்கரை ஆகியவற்றைப் பார்வையிட்டுவிட்டு , ராயபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தலைமையிடத்தில் தங்கினோம். அங்கு 3 மாணவர்களுக்கு ஒரு குளிருட்டப்பட்ட அறையை இலவசமாக ஒதுக்கிக் கொடுத்தார்கள். பிப்ரவரி 6 - ஆம் தேதி சி.எஸ்.ஐ.அமைப்பினர் அனைவருக்கும் காலை உணவு வழங்கி பரிசு கொடுத்தார்கள். பின்னர் மகாபலிபுரம் சென்று விட்டு, பிற்பகல் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று , மெட்ரோ ரயில் மூலம் எழுப்பூர் ரயில்நிலையம் வந்து பின்னர் ரயில் மூலம் சிவகாசிக்கு பிப்ரவரி 7 - ஆம் தேதி காலை வந்தடைந்தோம்'' என்றார்.
 இந்த சுற்றுலா குறித்து 4 -ஆம் வகுப்பு மாணவர் ஜி.தினேஷ்குமார் கூறியதாவது, ""விமானப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விமானத்தில் உள்ள பணிப்பெண்கள் ஆங்கில மொழியில் பேசினார்கள். இது குறித்து எனது ஆசிரியர் ஆங்கில மொழி
 படித்தால் உலகத்தில் எங்குவேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் எனக்கூறினார். எனவே நான் இனி ஆங்கில மொழியைப் படிக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.
 4 -ஆம் வகுப்பு மாணவி ஜெ.பிளசி கூறியதாவது: ""நாங்கள் விமானத்தைப் பார்க்க இயலாது என்ற நிலையில் அதில் பயணித்தது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கு சென்று பல அறிவியல் தொடர்பானவற்றைத் தெரிந்து கொண்டேன். மெட்ரோ ரயில் பயணம் மிகவும் அருமையாக இருந்தது'' என்றார்.
 8 -ஆம் வகுப்பு மாணவர் எம்.ஸ்ரீகார்த்திகேயன், "இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது, பிர்லாகோளரங்கின் மூலம், சூரியகுடும்பம் உள்ளிட்ட பல அறிவியல் தொடர்பானவற்றை தெரிந்து கொண்டேன். நான் பார்த்ததை சகமாணவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்'' என்றார்.
 8 -ஆம் வகுப்பு மாணவி பி.புவனேஷ்வரி , "மகாபலிபுரத்தில் இந்திய பிரதமரும், சீன நாட்டின் அதிபரும் சந்தித்த இடத்தைப் பார்த்து ரசித்தேன்.அங்குள்ள கல் சிற்பங்கள் பிரமிக்க வைத்தன. மொத்தத்தில் எங்களைப் போன்ற சாதாரண மாணவிகளுக்கு இந்த சுற்றுலா உண்மையிலேயே இன்பச்சுற்றுலாவாகும்'' என்றார்.
 - ச.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT