ஹீரோயின் ஸ்பெஷல் !
அரசியல், சினிமா குறித்து வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்தும் பா.ஜ.க. குறித்தும் பாராட்டிப் பேசியுள்ளார்.
'இது ஒரு அற்புதமான யோசனை. இதற்குக் காரணம் நமது பிரதமர் நரேந்திர மோடி, இந்த அரசாங்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், பெண்கள் அதிகாரம், மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முன்னுரிமையை பிரதமர் அளித்துள்ளார். பா.ஜ.க. இன்று வேறு எந்த மசோதாவையும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் பெண்களுக்கான அதிகாரத்தைத் தேர்வு செய்திருக்கின்றனர். இது அவர்களின் சிந்தனையைக் காட்டுகிறது. நாடு திறமையானவர்களின் கைகளில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இந்த மசோதா 1996-இல் அப்போதைய பிரதமர் ஹெச்.டி.தேவகௌடா தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. 2010-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கூட்டணியிலிருந்த சமாஜவாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பின்வாங்கியதால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
சம்பளம் வாங்கவில்லை தீபிகா படுகோன்!
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான 'ஜவான்' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று , 700 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. அதில், அட்லி, ஷாருக்கான், தீபிகா படுகோன், அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்.
நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, 'அனைவருக்கும் மிக்க நன்றி என்ற வார்த்தையைத் தவிர என்னிடம் கூற வேறு வார்த்தைகள் இல்லை. ஷாருக்கான் மீது நான் வைத்திருக்கும் அன்பிற்காகத்தான் இப்படத்தில் நடித்தேன். இந்த அளவுக்கான வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இதில் நடித்தற்காகப் பெருமை அடைகிறேன். எங்கள் இருவரின் உறவு குறித்து உங்கள் அனைவருக்குமே தெரியும். எனக்கு அவரிடமும், அவருக்கு என்னிடமும் ஒருவித உரிமை இருக்கிறது' என்றார்.
இதனிடையே சிரித்துக் கொண்டே பேசிய ஷாருக்கான், 'நாங்கள் தீபிகாவை ஏமாற்றிவிட்டோம். கேமியோ ரோலில்தான் நடிக்கப் போகிறோம் என்று தீபிகா நினைத்தார். ஆனால் அவரை வைத்து முழுப்படத்தையும் எடுத்துவிட்டோம் என்றார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய தீபிகா படுகோன், 'ஜவான்' படத்துக்கு நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ரன்வீர் சிங்கின் '83'-இல் நான் கேமியோ ரோலில் நடித்ததற்குக் காரணம் கணவரின் வெற்றிக்குப் பின்னால் நாம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதுதவிர, ஷாருக்கான், ரோஹித் ஷெட்டி படங்களில் கேமியோ ரோல்களில் நடிப்பேன்' என்று தெரிவித்திருக்கிறார். 2007-ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலமாகத்தான் தீபிகா படுகோனே பாலிவுட்டுக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து ஷாருக்கான் மேல் தான் பெரிய மரியாதை வைத்திருப்பதாக தீபிகா பலமுறை தெரிவித்திருக்கிறார்.
சோசியல் மீடியா ட்ரோலுக்கு கண்டனம்ரஷாமி தேசாயி
பாலிவுட் நடிகை ரஷாமி தேசாயிக்கு எதிராகத் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். அதில், ரஷாமியின் பெற்றோர் குறித்தும் சிலர் விமர்சனம் செய்து இருந்தனர். அதோடு, 'ரஷாமி எவ்வாறு வாழவேண்டும்' என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்களைக் கண்டிக்கும் விதமாக ரஷாமி தேசாய் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என்னைப் பற்றிய ட்ரோல்களை என்னால் புறக்கணிக்க முடியும். ஆனால் இதில் என் பெற்றோரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன? வேலையில்லாதவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். தயவுசெய்து என் பெற்றோரை பற்றி பேசாதீர்கள். நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். இது எனது வாழ்க்கை. இந்தச் சம்பவத்தை பார்க்கும்போது நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதிகள் என்று யாரையும் பொருட்படுத்தாமல் சோசியல் மீடியாவில் ட்ரோலிங் செய்யப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது. சோஷியல் மீடியாவில் என் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்கிறார்கள். அது என்னோடு நெருக்கமாக இருப்பவர்களின் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனாளி என் தாயை விமர்சித்து ட்ரோலிங் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டது.எல்லோரும், நான் என்ன செய்யவேண்டும் என்று என்னிடம் சொல்கிறார்கள். என் குடும்பத்தை பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள். இந்தப் பதிவுகளை நான் படித்தபோது மிகவும் மோசமானதாக உணர்ந்தேன்.
நான் கடினமாக உழைத்து சுயமாக முன்னேறி இருக்கிறேன். முடிவுகளை சொந்தமாக எடுக்கும் திறன் கொண்டவள். நெட்டிசன்கள் என் மீது காட்டும் அக்கறையை மதிக்கிறேன்.
ஆனால் அது என்னை அவமானப்படுத்துவதாக மாறி விட்டது. ஒவ்வொரு கலைஞருக்கும் தங்களின் விருப்பத்தை எவ்வாறு வழி நடத்துவது என்று தெரியும்.எதிர்மறையான மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியிருக்கிறது. டிரோலிங் என்ற பெயரில் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை விமர்சிப்பது தேவையற்றது. மக்கள் மோசமானவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதை நிறுத்தவேண்டும். சில நேரங்களில் எனது தரப்பில் தவறு இருந்திருக்கலாம். அதற்கு விமர்சனம் செய்வதில் தவறில்லை' என்று பேசியுள்ளார்.
ரஷாமி தேசாயிக்கும், அவரின் அம்மாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு இருந்தது. இப்போது அவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டுவிட்டது.