தினமணி கொண்டாட்டம்

சொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை!

தினமணி

தன்னுடைய சொற்ப வருமானத்திலும் ஐஸ் குச்சியால் "மின்னணு வாக்குபதிவு இயந்திரம்', "சந்திராயன் 2' செயற்கைக்கோள் போன்று 250-க்கும் அதிகமான கலைப் பொருட்களைச் செய்துள்ளார் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. எப்படி இந்தக் கலைப்பொருட்களைச் செய்யும் ஆர்வம் உண்டானது என்று அவரிடம் கேட்ட போது சொன்னார்:
 "நான் பிறந்த ஓர் ஆண்டிலேயே என்னுடைய இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்டது. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். அவர்களுக்கு என்னைப் போன்று பாதிப்பு எதுவும் கிடையாது. நடக்க முடியாத நிலையிலும் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. என்னுடைய நிலையைத் தெரிந்த ஒருவர், நான் வசிக்கும் பகுதியில் அழகுக்கலை கடை ஒன்றை தொடங்கினார். அதனுடைய மேற்பார்வையாளராக என்னைப் பணியில் அமர்த்தினார். ஐந்து ஆண்டுகள் அவரிடம் பணியாற்றினேன். இப்போது அந்தக்கடையை எடுத்துவிட்டார்கள்.
 அப்போது என்னுடைய அண்ணன் குழந்தைகள், அவர்களுடைய பள்ளித்தேவைக்காக ஐஸ் குச்சியால், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் ஏதாவது கலைப்பொருள் ஒன்றை செய்து தருமாறு கேட்டார்கள். அவர்களுக்குப் பேனா ஸ்டாண்ட் செய்து கொடுத்தேன். யாரிடமும் இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து கண்ணில் பார்க்கும் பொருள்களை எல்லாம் ஐஸ் குச்சியால் செய்ய ஆரம்பித்தேன். இப்படியாகக் கிரிக்கெட் லோகோ, பிளவர் வாஷ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சந்திரயான் 2 செயற்கைக்கோள் போன்றவற்றை ஐச்சி குச்சியால் உருவாக்கினேன்.
 எனக்கு உதவியாக இருப்பவர்கள் அம்மா செல்லம்மாள், அப்பா பால்பாண்டி தான். வயதான நிலையிலும் அவர்கள் தான் எனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார்கள்.
 ஆனால் வீட்டில் என்னுடைய வேலையை நானே செய்து கொள்வேன். அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டேன். முடிந்தவரை நான் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பேன். இதுவரை நான் செய்த பொருட்களை விற்பனை செய்யவில்லை. நானாகக் கற்றுக்கொண்ட கலையைத் தற்போது 50 பேருக்கு சொல்லிக் கொடுத்து வருகிறேன். அவர்கள் கட்டணமாகத் தரும் பணம் தான் எனக்கு வருமானம். இந்தச் சொற்ப வருமானத்திலும் டிரெண்டிங் ஆக உள்ள விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அந்தப் பொருள்களைச் செய்வேன். அப்படி நான் உருவாக்கியது தான் சந்திராயன் 2. எனக்கு வசதி இருந்தால் சந்திராயன் திட்டத்திற்குக் கூட பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று ஆசை. இந்தக் கலையை அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஒத்துழைப்புடன் சொல்லிக் கொடுக்க ஆசைப்படுகிறேன். நான் அறிந்த வரையில் இதுவரை இந்தியாவில் ஐஸ் குச்சியைப் பயன்படுத்தி யாரும் இத்தனை பொருட்களை உருவாக்கவில்லை. நான் செய்த பொருட்களைக் கொண்டு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்கிறார் சந்திரன்.
 -வனராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT